• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி தனது தேர்தல் பிரச்சாரம்

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் இராமேஸ்வரத்தை தலைசிறந்த சுற்றுலா நகரமாக மாற்றுவேன் என திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி தனது தேர்தல் பிரச்சாரத்தில் உறுதியளித்தார்.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நவாஸ்கனி மீண்டும் போட்டியிடுகிறார். இராமேஸ்வரத்திலிருந்து அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோருடன் தனது தீவிர தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினர்.

பிரச்சார பயணத்தில் பேசிய அவர், “இராமேஸ்வரம் நகரமானது ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்லக்கூடிய நகரமாக இருக்கின்றது. இராமேஸ்வரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அழகு மிகுந்த கடற்கரைகள் உள்ளன.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மத்திய அரசின் சுற்றுலா துறை நிதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தலைசிறந்த சுற்றுலாத்தலமாக உருவாக்கிட வேண்டும் என்று கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்திருக்கின்றேன். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசு எந்த சிறப்பு நிதியையும், இராமேஸ்வரம் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டிற்காக ஒதுக்கவில்லை. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் இராமேஸ்வரம் நகரத்தை தலைசிறந்த சுற்றுலா நகரமாக மாற்றிட, இராமேஸ்வரத்தை சுற்றியுள்ள பல்வேறு அழகு மிகுந்த கடற்கரைகளை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் சிறப்பு வசதிகளை செய்து தலைசிறந்த சுற்றுலா நகரமாக மாற்றப்படும்.

இராமேஸ்வரத்தை சுற்றி உள்ள பகுதிகள் சுற்றுலா தளமாக மேம்படும் பொழுது இந்த பகுதி மக்களினுடைய வாழ்வாதாரம் மேம்படும். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு வந்து செல்லும் பொழுது இங்கு உள்ள மக்களுக்கு தொழில் வாய்ப்புகளும் வேலை வாய்ப்புகளும் பெருகும். அதற்காக முழு முயற்சியையும் மேற்கொள்வேன்.
அதே போல இராமேஸ்வரத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் மாநிலங்களுக்கும் புதிய ரயில் சேவைகள் துவங்கவும். விமான நிலையம் அமைத்திட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் விமான நிலையம் அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.” என இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் நவாஸ்கனி தனது பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார்.