• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

லண்டனில் கொலை செய்யப்பட்ட மகனின் உடலை இந்தியா அனுப்ப நடவடிக்கை கோரி பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை.

BySeenu

Feb 25, 2024

கோவை மருதமலை அருகே உள்ள ஐ.ஒ.பி காலணியை சேர்ந்தவர் பட்டாபிராமன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மகன் விக்னேஷ் (36). கடந்த 14 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் தனியார் உணவக மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 1.5 ஆண்டுக்கு முன் லண்டன் நாட்டில் ரீடிங் என்ற பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்துச் செல்ல தயாராக இருந்த நிலையில் கடந்த பிப்14 ஆம் தேதி தான் பணியாற்றும் ஹோட்டலில் இருந்து சைக்கிளில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் விக்னேஷ் மீது மோதி விட்டு அவரை கொடூரமாக தாக்கிச் தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த விக்னேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வழக்கில் போலீஸார் 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த விக்னேஷ் உடலை இந்தியா எடுத்து வர தந்தை பட்டாபிராமன் சென்னையில் உள்ள அயலக நலத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அங்குள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் விசாரனைக்கு பின் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து காலதாமதம் ஆகி வருவதால் விக்னேஷ் உடலை விரைந்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பெற்றோர் கூறும் போது கடந்த 14ல், மகன் விக்னேஸ் விபத்தில் இருந்ததாக தகவல் கூறினார்கள், இரண்டு நாட்கள் கழித்து கொலை செய்துவிட்டதாக கூறினார்கள். கொலை செய்யும் அளவிற்கு அவருக்கு எதிரிகள் இல்லை. மகன் இறந்து 10 நாட்கள் ஆகியும் லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முறையான பதில் கூறவில்லை. இறந்த மகனின் இறுதி மரியாதையை முறைப்படி செய்ய வேண்டும். தமிழக அரசும், தமிழக முதல்வர் தலையிட்டு மகனின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.