• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை, அறிவுசார் மையம், அனுபவம் மையம் ஆகியவை திறப்பு…

BySeenu

Jan 5, 2024

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் முடிவற்ற திட்ட பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் ஆடிஸ் வீதியில் மாநகராட்சி சார்பில் 2.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையம், குறிச்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 52.16 கோடி மதிப்பில் தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை, குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள தமிழர் பாரம்பரிய சிலைகள், உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அனுபவ மையம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதன் மொத்த மதிப்பு 57.66 கோடி ஆகும்.

இதன் நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சி அறிவுசார் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றி செல்வன் உட்பட பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இவற்றைத் திறந்து வைத்ததும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி அறிவு சார் மையத்தில் உள்ள வசதிகளை பார்வையிட்டனர். மேலும் அறிவு சார் மையத்தில் இருக்கும் ஸ்மார்ட் வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திரையில் மாவட்ட ஆட்சியர் Best Wishes என எழுதி அவரது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கும் நேரத்தில் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொலைக்காட்சிகள் தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் ரத்தானது. இதனால் முதல்வரின் நேரலையை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அவர்களது செல்போனில் பார்த்தனர். சிறிது நேரம் கழித்து தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு நேரலை இணைக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறிச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் பலூன்கள் பறக்க விடப்பட்டது. மேலும் அங்குத் திரண்டிருந்த பொதுமக்கள் திருவள்ளுவர் சிலை முன்பு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த குறிச்சி பகுதியில் மிதிவண்டி பாதை, நடை பாதை,, உணவகங்கள், அலங்கார குடைகள், சிறுவர் விளையாட்டு திடல், பாரம்பரிய சிலைகள் என ஏராளமானவை அமைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் அமைக்கப்பட்டுள்ள அனுபவ மையத்தை பார்வையிட்டனர். இங்கு 3D முப்பரிமாண காணொளி, கோவை மாநகர சிறப்புகளை விளக்கும் வகையில் 3D காணொளி, குழந்தைகள் விளையாட்டு 3D காணொளி ஆகிய கட்டமைப்புகள் ஜிப் லைன், இரண்டு பேர் ஓட்டும் சைக்கிள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியாரும் மாநகராட்சி ஆணையாளரும் இரண்டு பேர் ஓட்டும் சைக்கிளை ஓட்டி பார்த்து மகிழ்ந்தனர்.