• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி காலதாமதம்.., பொதுமக்கள் சாலை மறியல்…

ByP.Thangapandi

Dec 5, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது., இந்நிலையில் மதுரை ரோட்டில் உள்ள 7வது வார்டு நேதாஜி நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகளை செய்யாமல் காலதாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக பணிகள் மந்தமாக நடைபெற்று வரும் நிலையில் கழிவுநீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அவல நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகளிடமும், ஒப்பந்ததார்களிடமும் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லை எனவும், கடந்த வாரம் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பனும் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்த நிலையில் இன்று வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பணிகளை முடிக்க ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.