• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்…

ByKalamegam Viswanathan

Sep 26, 2023

மத்திய மின்வேதியியல் ஆய்வகம் 1953ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி அன்று, அப்போதைய இந்தியக் குடியரசு தலைவர் முனைவர் மேதகு சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய நாட்டின் 12வது ஆய்வகமாக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக்குழுமத்தின் கீழ் நாட்டுக்கு அர்ப்பணித்தார்கள். மத்திய மின்வேதியியல் ஆய்வகம் ஒரு பெருமை மிக்க நிறுவனமாக, அதாவது 100 விஞ்ஞானிகள், சுமார் 175 பிற ஆராய்ச்சி மற்றும் நிர்வாகப் பணியாளர்கள், மற்றும் 100 ஆராய்ச்சி மாணவர்களுடன் தெற்காசியவில் மின்வேதியியலில் மிகப் பெரிய ஆய்வகமாகத் திகழ்கிறது. இந்தியாவில் மின்வேதியியலில் பல்வேறு தொழில் நுட்பங்களுக்கான துவக்கத் தளமாக திகழ்வதுடன், ஏறத்தாழ 900 காப்புரிமைகள் மற்றும் 7500 மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை பல்வேறு உலகத்தரம் வாய்ந்த ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ளது. மேலும், 250 செயல்முறைகள், 600 நிதி உதவி மற்றும் மானியத் திட்டங்கள், 450 தொழில் தொடங்க உரிமங்கள் ஆகியவைகளை இந்த தேசத்திற்கு வழங்கியதுடன், தேசத்தின் அறிவியல் வரைபடத்தில் ஒரு மைல் கல்லாகவும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

இந்த ஆய்வகமானது மின்வேதியியல் மற்றும் தொழில் நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதுடன் மின் வேதியியல் ஆய்வின் மூலம் பல்வேறு ஆராய்ச்சி வினாக்களுக்கு விடைகாணும் விதமாக செயல்படுகிறது. தனது ஆராய்ச்சிகளில் முக்கியமாக அரிமான அறிவியல் மற்றும் பொறியியல், மின் வேதியியல் பொருட்கள், மின் வேதியியல் சக்தி மூலங்கள், மின் வேதியியல் மாசுக் கட்டுப்பாடு, அடிப்படை மின் பூச்சு, மீச்சிறு (நானோ) அளவிலான மின் வேதியியல், மின் கணிம/கரிம வேதியியல் ஆகிய துறைகளில் எதிர்கொள்ளும் தொழிற்சாலை பிரச்சினைகளை சரிசெய்யும் விதத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை (26.09.23) காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பார்வையாளர் தினம் கொண்டப்பட்டது. இதில் இதுவரை செய்யப்பட்ட நவீன ஆராய்ச்சிகள் குறித்த கண்காட்சி இடம் பெற்றது. நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை சார்ந்த சுமார் 20 மாணவ, மாணவிகள் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டனர். அதில் லெட் ஆசிட் பேட்டரி, லித்தியம் அயன் பேட்டரி, சோடியம் அயன் பேட்டரி, மெட்டல் அயன் பேட்டரி, மெட்டல் சல்பர் பேட்டரி, உலோக காற்று (metal-Air) பேட்டரி, Flow பேட்டரி போன்ற அனைத்து வகையான பேட்டரி குறித்தும், அதன் பயன்கள் மற்றும் தேவைகள் குறித்தும் தெளிவாக ஆராச்சியாளர்கள் எடுத்து கூறினர். சூப்பர் மின்தேக்கி மூலம் மின்சார வாகனம் தயாரித்தல் குறித்தும், இதன் மூலம் எதிர்கால எரிபொருள் பயன்பாட்டை சமாளிக்க, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க போன்ற பல்வேறு தேவைகள் குறித்தும் தெளிவாக விளக்கினர். பொருட்களின் அரிமான (இரும்புக் மேற்பரப்புகளில் பிடிக்கும் துருவை) விளைவுகளை வேதியியல் முறையில் நீக்க முடியும் எனவும், பல்வேறு கட்டிடங்கள், ராணுவ உபகரணங்கள், பாலங்கள், கப்பல்கள் எவ்வாறு அரிமான இழப்புக்களை தடுக்கிறார்கள் எனவும், புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டது.

கண்ணாடி பொருட்களை எவ்வாறு அறிய அழகு பொருட்களாக பற்றி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பலவகையான ஆராய்ச்சி பொருட்களை சோதனை செய்யும் உயர் தெளிவுத்திறன் பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கி (HR -TEM), புல உமிழ்வு ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் (FE-SEM), X-Ray Powder Diffraction (XRD), Raman Spectrometer, ஃபோரியர்-மாற்றும் அகச்சிவப்பு நிறமாலை (FT-IR), புற ஊதா கண்ணுறு நிறமாலைமானி (UV-Vis-NIR), நிறை நிறமாலைமானி (Mass spectrometry) போன்ற உயர் நிறமாலை கருவிகள் செயல்படும் விதம் தெளிவாக விளக்கப்பட்டது. இயற்பியல் உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.