• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பயங்கர காட்டுத்தீ…..

ByKalamegam Viswanathan

Apr 22, 2023

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மின்னல் காரணமாக பேய்மலை மொட்டை வனப் பகுதியில் திடீர் காட்டுத்தீ பரவிவருகிறது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் உள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் திருவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகமாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டு எருமை, காட்டு பன்றி, புள்ளி மான், சருகு மான், மிளா உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. மேலும் இந்த வனப் பகுதி சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாகவும் இருந்து வருகிறது. பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த வனப் பகுதியை பாதுகாக்கும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.


மேற்கு மலைத் தொடர்ச்சியில், கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்து, 500 மீட்டர் உயரமுள்ள பேய்மலை மொட்டை வனப் பகுதியில், வனத்துறை அதிகாரிகளின் வயர்லெஸ் வாக்கிடாக்கி கருவிகள் பயன்பாட்டிற்காக டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டவரின் மூலமாக கிடைக்கும் சிக்னல்களை கொண்டு தான், மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் சாம்பல் நிற அணில்கள் சரணாலய பாதுகாப்பு பணிகளில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் , பேய்மலை மொட்டை வனப் பகுதியில் கடுமையான மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மின்னல் காரணமாக பேய்மலை மொட்டை வனப் பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டு, வனப்பகுதி பற்றி எரியத் துவங்கியது. இது குறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் காட்டுத்தீ எரியும் பகுதிக்கு தீயை கட்டுப்படுத்தி அணைப்பதற்காக சென்றுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் பயன்படுத்தி வரும் வாக்கிடாக்கி வயர்லெஸ் டவர் கோபுரத்திற்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. வயர்லெஸ் டவர் கோபுரத்திற்கு காட்டுத்தீயினால் பாதிப்பு ஏற்பட்டால், வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தி வரும் வாக்கிடாக்கி கருவிகள் முற்றிலும் செயல் இழக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.