• Mon. Apr 29th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 14, 2023

சிந்தனைத்துளிகள்

ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால், வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்.
விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்.
அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
மருத்துவரைக் கண்டதும் கோபமாக,
“என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்.
ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்?
உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?” என்று கதறினார்.
மருத்துவர் புன்னகையுடன், “மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை. எனக்கு அழைப்பு வந்ததும் என்னால் இயன்ற அளவு விரைந்து வந்தேன். சற்று பொறுமையாக இருங்கள்” என்று கூறினார்.
“பொறுமையாக இருக்கவா?” அந்த தந்தை மேலும் ஆத்திரத்துடன், “உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்” என்று கொந்தளித்தார்.
மருத்துவர் சிரித்த முகத்துடன், “எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
“கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது” தந்தை முனுமுனுத்தார்.
அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது. மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார், “உங்கள் மகன் பிழைத்துவிட்டார்” என்று சொன்னபடி,

“மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்” என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.
சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம், “அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா? என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட அவருக்கு நேரமில்லையா?” என்று நொந்துகொண்டார் தந்தை.
அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, “அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.
இன்று, அவர் மகனை அடக்கம் செய்யும் காரியங்களில் ஈடுபட்டிருந்தார். உங்கள் மகனுக்காக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று அழைத்தவுடன் அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார். இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்” என்று கூறினாள். நீதி:
எவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,
அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப் பற்றியும் நாம் அறிந்திருக்காதவரை! “நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை. மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை.”
இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமாக இருக்க போவதுமில்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *