• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஓசூரில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி..!

Byவிஷா

Feb 23, 2023

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அம்மாவட்ட காங்கிரஸ் எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லக்குமார் எம்.பி..,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கான ஆய்வுகளை மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை பொம்மசந்திரா வரை வழங்கப்பட்டு வருகிறது. அதனை பொம்மசந்திராவிலிருந்து அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது. இதுதொடர்பாக நான் ஏற்கனவே பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவன தலைவர், கர்நாடகா முதல்வர் மற்றும் தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தினேன். அப்போது, இத்திட்டம், 2 மாநில அரசு பகுதிகளை இணைக்கும் திட்டம். இரு மாநில அரசின் பங்கேற்பு மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு சேர்ந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினேன். தொடர்ந்து, தமிழக அரசு ஓசூர் மெட்ரோ ரயில்வே திட்ட அளவீடு பணிக்காக ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்தின் கொள்கைகள், விதிகளை பார்க்கும் போது, இருமாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த முடியாது என மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்படுவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை செயலாளரை நேரில் சந்தித்து இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து உரிய ஆதாரம், ஆவணங்களுடன் பேசினேன்.
இதனை தொடர்ந்து, மத்திய நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர், ‘ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து கொள்கை அளவில் ஆய்வுபணிகள் மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசுக்கு கடிதம் வந்துள்ளது. எனவே, ஆய்வு பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம் எந்த சூழ்நிலையிலும் கைவிட வாய்ப்பு இல்லை. மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.