கோவை ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல், செய்து பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபரிடம் ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக் கணக்கான பயணிகள் வந்து, செல்கின்றனர்.
இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் ரயில்களில் கடத்துவது அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருடன் ரயில்வே காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை தொடர்ந்து இன்று கொல்கத்தாவில் ஷாலிமாரில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வரை செல்லும் விரைவு ரயிலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது பொதுமக்கள் பயன்படுத்தும் பொது பெட்டியில் முன் பக்கத்தில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கடத்தி வந்த நபரைப் பிடித்து ரயில்வே காவல் நிலையத்தில் அழைத்து வந்து நடத்தப்பட்ட விசாரணையில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த சபரிநாத் என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எடை போட்டு பார்க்கும் போது சுமார் 8.200 கிராம் இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல் துறையினர் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரயில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி போதைப் பொருள்கள் கடத்தல் சம்பவங்களும் அரங்கேறி வரும் நிலையில், கோவை ரயில் நிலையத்தில் 8.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.