• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

4 கி ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல்..,

ByPrabhu Sekar

Aug 9, 2025


மலேசிய நாட்டிலிருந்து உயர்ரக, பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா விமானத்தில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து, விமான நிலைய சுங்கத்துறையின் ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், இன்று அதிகாலையில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 10.25 மணிக்கு, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியது.

அந்த விமானத்தில் இறங்கி வந்த பயணிகளை, விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 வயது இளைஞர் ஒருவர், மலேசிய நாட்டிற்கு, சுற்றுலாப் பயணிகள் விசாவில் சென்று விட்டு, திரும்பி வந்தார். இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு, அந்தப் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்த கேரள பயணி, முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதை அடுத்து சந்தேகத்தில் அவருடைய உடமைகளை திறந்து பார்த்து சோதனை நடத்தினர்.

அவருடைய சூட்கேஸில் மறைத்து வைத்திருந்த 6 பார்சல் களில், உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். 6 பார்சல்களிலும், 4 கிலோ எடையுடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடி.

இதை அடுத்து சுங்க அதிகாரிகள், கேரளப் பயணியை கைது செய்தனர். அதோடு அவர் வைத்திருந்த ரூ. 4 கோடி மதிப்புடைய, ஹைட்ரோபோனிக் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் கேரள பயணியிடம், சுங்கத்துறை அதிகாரிகள் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, கோலாலம்பூர் விமான நிலையத்தில், இந்த சூட்கேஸை, ஒருவர் என்னிடம் தந்து, இதில் பிஸ்கட்கள், சாக்லேட்டுகள், குழந்தைகள் விளையாடும் டாய்ஸ் போன்றவைகள் இருக்கின்றன. இதை எடுத்துச் செல்லுங்கள். சென்னை விமான நிலையத்தில் எங்கள் உறவினர் ஒருவர், உங்களை அடையாளம் கண்டு, இந்த சூட்கேஸை வாங்கிக் கொண்டு, உங்களுக்கு அன்பளிப்பாக, பணம் கொடுப்பார் என்று கூறினார். இதில் போதைப் பொருள் இருப்பது எனக்குத் தெரியாது. பணத்துக்கு ஆசைப்பட்டு, நான் சூட்கேஸை வாங்கி வந்தேன் என்று, கேரள பயணி கூறினார்.

இதை அடுத்து சுங்க அதிகாரிகள், கேரள பயணி மூலமாக, இந்த சூட்கேசை வாங்க வந்திருந்த, கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரையும் பிடிப்பதற்கு, நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் இந்த பயணி, சுங்கத்துறையிடம் சிக்கிக் கொண்டார் என்பதை அறிந்து, அந்தப் போதை கடத்தல் கும்பலை சேர்ந்த நபர், தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். ஆனால் அவரையும் கைது செய்ய சுங்கத்துறையினர் நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

சென்னை விமான நிலையத்தில், ஒரே நேரத்தில் ரூ. 4 கோடி மதிப்புடைய, உயரக ஹைட்ரோபோனிக் கஞ்சா 4 கிலோ, பறிமுதல் செய்யப்பட்டதோடு, போதைப் பொருளை கடத்தி வந்த, கேரள பயணி கைது செய்யப்பட்டு, இந்தப் போதை கடத்தல் கும்பலை சேர்ந்த மற்றொருவர் தப்பி ஓடி தலைமறைவான சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.