சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமலும், நிர்வாக காரணங்களாலும், இன்று லண்டன் மற்றும் ஹைதராபாத் ஆகிய 4 விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
லண்டனில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தினமும் வந்து சேரும். அந்த விமானத்தில் லண்டன் பயணிகள் மட்டுமின்றி, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாட்டுப் பயணிகளும் அதிக அளவில் வருவார்கள். எனவே அந்த விமானம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த விமானம். இன்று லண்டனிலிருந்து சென்னை வர வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதைப்போல் சென்னையில் இருந்து லண்டனுக்கு தினமும் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானமும், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காலை 11.10 மணிக்கு வரவேண்டிய அலையன்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், இன்று திடீரென ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் பகல் 12 மணிக்கு, சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு செல்ல வேண்டிய அலையன்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இன்று அடுத்தடுத்து வருகை விமானங்கள் 2, புறப்படு விமானங்கள் 2 என்று மொத்தம் 4 விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமானங்களில் பயணிக்க போதிய பயணிகள் இல்லாத காரணத்தாலும், நிர்வாக காரணங்களாலும், அந்தந்த விமான நிறுவனங்கள், விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், விமானங்கள் ரத்து குறித்து, பயணிகளுக்கு ஏற்கனவே தகவல்கள் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், இந்த விமானங்களில் பயணிக்க இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் இதை போல் லண்டன், ஹைதராபாத் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளாகி உள்ளனர்.