• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

4 கதாநாயகிகள் நடித்துள்ள கன்னித்தீவு!…

Byadmin

Aug 5, 2021

பெண்களின் போராட்ட குணத்தை பிரதிபலிக்கும் கன்னித்தீவு!…

திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ஜனை படத்தை இயக்கிய சுந்தர் பாலு இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் கன்னித்தீவு. இதில் வரலட்சுமி,  ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்‌ஷா என்று 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்தை கிருத்திகா புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது.

படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், கன்னித்தீவு என்ற பெயர் தமிழ்மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர், அதோடு கன்னித்தீவு என்றாலே அட்வெஞ்சர் என்பதாலும் இந்தப்பெயரை படத்திற்கு வைத்தோம். மேலும் படத்தில் நான்கு பெண்கள் இருப்பதால் இந்தப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். கன்னித்தீவு பெயருக்கு பொருத்தமாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஒரு தீவில் படம் பிடித்துள்ளோம்.

வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது. சின்ன வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நான்கு பேரும் சமூக அக்கறையுள்ளவர்கள். உலகத்தை காப்பாற்ற முடியாவிட்டாலும் தங்கள் பகுதியையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அந்த பகுதியில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்த பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள். அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அந்த பிரச்சினை என்ன? அதில் இந்த நான்கு பேரும் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆக்சன் த்ரில்லர் திரைக்கதையாக உருவாக்கியுள்ளதாக இயக்குநர் சுந்தர்பாலு கூறினார்.

ராஜ் பிரதாப் இசையமைக்கும் இப்படத்திற்கு சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். அதிரடியான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சிவா வடிவமைத்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள்  திறந்த பின் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.