• Fri. Apr 26th, 2024

நாட்டில் 38 ஆயிரம் ரயில்வே பாலங்கள்
100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை

நாட்டில் 38 ஆயிரத்திற்கும் கூடுதலான 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே பாலங்கள் உள்ளன.
சமீபத்தில் குஜராத்தில் மோர்பி மாவட்டத்தில் நூறாண்டு பழமையான தொங்கு பாலம் ஒன்று புனரமைக்கப்பட்டு, மறுபயன்பாட்டுக்கு வந்தபோது, இடிந்து விழுந்தது. நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த விபத்தில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மச்சு ஆற்றின் நீரோட்டத்தின் அழகை காண இந்த பாலத்தில் சுற்றுலாவாசிகள் சென்று பார்வையிடுவது வழக்கம். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் சரியாக மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றும், துருப்பிடித்த, பழைய கேபிள் வயர்கள், அதிக எடை உள்ளிட்டவை விபத்துக்கான காரணிகளாக கூறப்படுகின்றன. இதனால், வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க 100 ஆண்டுகள் பழமையான பாலங்களை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று, ரயில்வே துறையை எடுத்து கொண்டால், 100 ஆண்டுகள் பழமையான பாலங்கள் நிறைய உள்ளன. அவற்றின் நம்பகதன்மையை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. நூறாண்டு கண்ட 38,850 ரயில்வே பாலங்கள் நாட்டில் உள்ளன என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் முன்பு தெரிவித்து இருந்தது. இந்த பாலங்களை தொடர்ந்து கண்காணித்து, பராமரிக்கும் சீரிய பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி, இந்த பாலங்களை ஆண்டுக்கு இரு முறை ரயில்வே நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *