சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”.
வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில், இயக்குநர் பிரபு சாலமன் பேசியதாவது……
என்னுடைய நண்பர் ஜெகவீர் அவருடன் வேறு ஒரு ப்ராஜெக்ட் செய்வதற்காக ஒரு வருடம் டிராவல் செய்து உள்ளேன், அவரின் உழைப்பு, ஆர்வம் பற்றி எனக்குத் தெரியும். இந்தத் திரைப்படம் அவருக்கு ஒரு மிகச் சிறந்த அறிமுகத்தைத் தரும். படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இன்றைய விழாவின் நாயகன் இமான் ஒரு நல்ல இசை இல்லாமல் ஒரு நல்ல கதையை உங்களால் சொல்லவே முடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு நம் வாழ்க்கையை, மண் சார்ந்து நம் படங்கள் பிரதிபலிக்கிறதோ அந்தளவு நம் படங்கள், உலகத் திரைப்படங்களாக உலகிற்குத் தெரியும். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, இன்றைய சினிமா உலகில் முதலில் பாசிடிவாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்த இயக்குநர் தான். நம் மண்ணின் கதையைச் சொல்ல வேண்டும் என நினைத்து, அதை மிக அழகாக இந்த திரைப்படத்தில் சொல்லி இருக்கிறார். அந்த துணிச்சலுக்கு சுசீந்திரனுக்கு வாழ்த்துக்கள். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற படங்களைப் போல எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம், அந்த இடத்தை இந்தத் திரைப்படம் நிறைவு செய்யும். எந்த இடத்திலும் தொய்வில்லாமல் மிக அருமையாகத் திரைக்கதையை எடுத்துச் சென்றுள்ளீர்கள், நடித்த நடிகர்கள் அனைவரும், மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். யாருமே தனியாகத் தெரியவில்லை, அந்தந்த பாத்திரங்களாகத்தான் எனக்குத் தெரிந்தார்கள். இன்றைய தலைமுறையைப் பற்றி மிக அழுத்தமான ஒரு விஷயத்தை, மிகத் தைரியமாகப் பேசியிருக்கிறார். காதல் தாண்டி, நாயகனும் நாயகியும் நண்பர்களாக இருக்க முடியுமா? என்ற ஒரு விஷயத்தை இந்த திரைப்படம் பேசுகிறது. இதை முன்பே எனது இயக்குநர் அகத்தியன் சார் தன்னுடைய காதல் கோட்டை திரைப்படத்தில் பேசி இருந்தார். கதாநாயகினும் கதாநாயகனும் சந்திக்காமல் ஒரு காதல் கதை எடுத்தார். அது இந்தியாவையே புரட்டிப் போட்டது. அதே போல் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் பட குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது….
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், இது எங்கள் முதல்ப்படம். சுசீந்திரன் சார் மீதான நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் இது. சொன்னது போல 40நாளில் இப்படத்தையே முடித்து விட்டார். ஜெகவீர் என் நண்பர் அவர் மூலம் தான் சுசி சார் அறிமுகம். 2கே ஜெனரேஷனை நெகடிவாக காட்டுகிறார்கள் ஆனால் சுசி சார் மிக அருமையாக இதைக் கையாண்டுள்ளார். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய சுசி சாருக்கு நன்றி. இது எல்லோருடைய உழைப்பு. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.
இசையமைப்பாளர் இமான் பேசியதாவது….
இந்த திரைப்படத்தை இன்று காலை பார்த்த அத்தனை முக்கியமான இயக்குநர்களுக்கும், அவர்களுடைய நேரத்தை செலவிட்டு, இப்படம் பார்த்துப் பாராட்டிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இத்தனை குறுகிய காலத்தில், ஒரு திரைப்படத்தைத் திட்டமிட்டு, அத்தனை வேலைகளையும் கச்சிதமாக முடிக்கக் கூடிய, ஒரே இயக்குநர் சுசீந்திரன் சார் மட்டுமே, அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உடலாலும், மனதாலும், பலத்தாலும் மிக நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படும் பல நண்பர்கள் உள்ளனர், அதில் நானும் ஒருவன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…..
வெண்ணிலா கபடி குழு படத்திற்குப் பிறகு முதல் படம் போன்ற உணர்வை இந்தப்படம் தந்துள்ளது, இந்தப்படத்தை என் நெருங்கிய நண்பர்கள் இயக்குநர்களுக்குப் போட்டுக் காட்டினேன் பார்த்து விட்டு வாழ்த்தியதற்கு நன்றி. இப்படத்திற்கு உறுதுணையாக இருந்த ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணனுக்கு நன்றி. என் உடன் நின்ற இசையமைப்பாளர் இமானுக்கு நன்றி. புதுமுகமாக அறிமுகமாகும் ஜெகவீருக்கு வாழ்த்துக்கள், துஷ்யந்த் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள், மீனாக்ஷிக்கு வாழ்த்துக்கள், அனைத்து நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கும் விக்னேஷுக்கு நன்றி, இப்படம் கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும், அனைவருக்கும் நன்றி என்றார்.
