கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள வனக்கல்லூரியில் 27வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
வனக்கல்லூரியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் 12 மண்டல வனத்துறையை சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். முன்னதாக விளையாட்டு ஜோதி ஏற்றப்பட்டது. மேலும் இந்த ஆண்டில் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் அவர்கள் வென்ற பரிசுகள் மற்றும் கோப்பைகளை அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், இந்த விளையாட்டு போட்டிகள் என்பது முக்கியமான ஒன்றாகும், விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள அண்ணன்(உதயநிதி ஸ்டாலின்) பொறுப்பேற்ற பிறகு நம் மாநிலத்தில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான செஸ் போட்டி, கேலோ இந்தியா போட்டிகள், ஃபார்முலா ஃபோர் கார் பந்தயம், நீர் சருக்கு விளையாட்டுகள் ஆகியவை தமிழ்நாட்டில் நடத்தி பெருமை சேர்த்திருக்கிறார். பாரிஸில் பாரா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற மாரியப்பன் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில் எட்டாவது அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெற்றது. நிலையில் 28 வது அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற தமிழக வனத்துறை விளையாட்டு வீரர்களுக்கு அரசு சார்பில் தங்கம் வென்ற வீரர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வெள்ளி பதக்கம் என்ற வீரர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வெண்கல பதக்கம் வென்ற வீரர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதனை உயர்த்தி வழங்குவதற்கான கோரிக்கை வர பெற்றுள்ளதை முன்னிட்டு இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அந்த கோரிக்கை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 2022 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரை 920.52 கோடி ஜப்பான் நாட்டு நிதி உதவி செலவில் தமிழ்நாடு உயிர் பன்மையியல் பசுமையாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அகழிகள், செயற்கை நுண்ணறிவு கருவிகள், செயற்கை தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்டு கோவை பாலக்காடு ரயில்வே வழித்தடத்தில் யானை உயிரிழப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. மனித வன விலங்கு மோதல்கள் பல்வேறு நடவடிக்கைகள் திட்டங்கள் மூலமாக தடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வனப்பரப்பை 10 ஆண்டுகளில் 23.76 சதவீதத்தில் இருந்து 33 சதவிகிதமாக அதிகரிப்பதற்கு 260 கோடி நாட்டு மரங்களை நட்டு கால சூழ்நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு பல்வேறு இயக்கங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக திண்டுக்கல் கரூர் மாவட்டங்களுக்கு இடையே தேவாங்கு சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது, ஈரோடு மாவட்டத்தில் பெரியார் வன சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டின் மாநில வனவிலங்கான வரையாடுகளுக்காக நீலகிரி வரையாடு திட்டம், கிழக்குத் தொடர்ச்சி மலையில் சூழல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் அரிய தாவரங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் 10 கோடி மதிப்பில் விதை பெட்டகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது நடைபெற உள்ள மாநில அளவிலான வனத்துறை போட்டியில் விளையாட்டு வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். . இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-20ம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற உள்ள 27 வது அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் விளையாடுவதற்கு வாழ்த்துக்கள் என கூறினார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்தத் போட்டியில் தேர்வானவர்கள் அகில இந்திய வனத்துறை சார்பில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுவார்கள் என தெரிவித்தார். மாஞ்சோலை விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்ற பட்சத்தில் அரசு நிலைப்பாட்டை தெரிவித்து விட்டதாகவும் நீதிமன்றத்தில் அந்த வழக்கு இருப்பதால் அதைப்பற்றி பேசவில்லை என தெரிவித்தார். யானை வழித்தடங்கள் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்து ஆராய்ந்து வருவதாகவும் இது குறித்து சட்ட சபையிலும் தான் பேசியிருப்பதாகவும் தெரிவித்தார். யானைகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது நல்ல விஷயம் என தெரிவித்த அவர் இதன் மூலம் வனத்துறை எந்த அளவிற்கு செயல்படுகிறது வனவிலங்குகளை எந்த அளவிற்கு பாதுகாக்கிறது என்பதற்கான அறிகுறி என தெரிவித்தார். மனித விலங்கு மோதல்கள் நடந்தால் அதற்கான வனத்துறை அதிகாரிகளுக்கு குழு இருப்பதாகவும் அது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மனித வனவிலங்கு மோதல் என்பது நம் மாநிலத்தில் மட்டுமில்லாமல் அனைத்து இடங்களிலும் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் அதிகம் உள்ள இடங்களில் தனி கவனம் செலுத்தி வருவதாகவும் அந்தந்த மாவட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார் . நம்மைப் பொறுத்தவரை ஒவ்வொரு விஷயத்தையும் படிப்படியாக நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். மேலும் அனைத்து ரிசார்ட்டுகளும் அனுமதி இல்லாமல் இயங்கவில்லை என தெரிவித்த அமைச்சர் அந்த ரிசார்டுகளுக்கெல்லாம் உரிமம் இருப்பதாகவும் உரிமம் இல்லாமல் இயங்குவதை கவனத்திற்கு கொண்டு வந்தால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் புலிகளை வனத்திற்குள் விடுவது தான் எங்கள் நோக்கம் என தெரிவித்தார்.
மருதமலை பகுதியில் இருக்கும் குப்பை கிடங்கை எடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாக கூறினார். மேலும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஊதியம் குறித்து பரிசோதித்து வருவதாகவும் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்தார். மேலும் மனித விலங்கு மோதலால் ஏற்படும் விளைவுகளுக்கு நிவாரணத்தை முதலமைச்சர் அதிகப்படுத்தியும், விரைவு படுத்தியும் இருப்பதாக தெரிவித்தார். யானைகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருப்பதற்கு தற்பொழுது பல்வேறு நவீன கருவிகள் வந்திருப்பதை குறிப்பிட்ட அமைச்சர் இவற்றை கோவை வனப்பகுதியில் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் வனத்துறை நிதியில் பல்வேறு புதிய நவீன கருவிகளை வாங்கி ஒவ்வொன்றாக பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் 40 ட்ரக்கிங் சாலைகளை கண்டறிந்துள்ளதாக தெரிவித்த அவர் கூடிய விரைவில் விளையாட்டு துறை அமைச்சர் அதனை திறந்து வைக்கு இருப்பதாகவும் அது குறித்தான விவரங்கள் ஆன்லைனில் தெரியப்படுத்தப்படும் என்றார்.

நன்னீர் நாய்கள் குறைந்தது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், மிகவும் தெரியபட்ட விலங்குகள் எல்லாம் தற்பொழுது அரிய வகை விலங்குகளாக மாறிவிட்டதாகவும் அது குறித்து கவனம் எடுத்து நடவடிக்கை மேற்கொள்வோம் தற்போது வரையாடுகள் மீது அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.








