• Mon. Jul 1st, 2024

தமிழக கல்லூரி மாணவர்கள் 25 பேர் லண்டன் பயணம்

Byவிஷா

Jun 10, 2024

லண்டனில் நடைபெறும் சிறப்பு பயிற்சிகளில் கலந்து கொள்வதற்காக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக கல்லூரிகளைச் சேர்ந்த 25 மாணவர்கள் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பல்வேறு பாடப்பிரிவுகளில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில், தற்போது இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக் கழகத்தில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒரு வார சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, தமிழகத்தில் உள்ள 15 பொறியியல் மற்றும் 10 கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக, இப்பயிற்சிக்காக ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து, அந்தந்த கல்லூரிகள் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் பெற்றது. இதில் சிறப்பு பயிற்சி பெறுவதற்கு 1,267 கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.
அவர்களுக்கு பல்வேறு திறனாய்வு தேர்வுகள் நடத்தி, அதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அதில் சிறப்பாக செயல்பட்ட 25 மாணவ, மாணவிகள் லண்டனில் சிறப்பு பயிற்சி பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் நேற்று அதிகாலை 5.39 மணியளவில், திறனாய்வு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 25 கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக 2 பேராசிரியர்களும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலமாக லண்டனுக்குப் புறப்பட்டு சென்றனர்.
லண்டனுக்கு செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகளை, அவர்களின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
இதற்காக, நேற்று அதிகாலை 1.30 மணியில் இருந்து தேர்வு 25 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலை சேர்ந்தவர்கள் வரவேற்று, லண்டன் பயணத்துக்காக சென்னை விமான நிலையத்துக்குள் அழைத்து சென்றனர்.
இது குறித்து லண்டனில் சிறப்பு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட கல்லூரி மாணவி கிருத்திகா கூறுகையில்,
நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் நிறைய திறனாய்வு பயிற்சிகள் பெற்றேன். இதற்கான ஆன்லைன் மூலமாகவும் 10 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டன. பின்னர் லண்டன் செல்வதற்கு நான் உள்பட 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது லண்டன் கல்லூரியில் சிறப்பு பயிற்சிக்காக செல்வதில் மிகுந்த மகிழ்ச்சி. இது, எங்கள் வாழ்வுக்கு மிகுந்த பலனிக்கும் என்று தெரிவித்தார்.
லண்டனில் தேர்வு பெற்ற தமிழகத்தை சேர்ந்த 25 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அங்கு வரும் 16-ம் தேதி வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *