• Sat. Apr 27th, 2024

கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்

ByA.Tamilselvan

Feb 9, 2023

ராமேசுவரம் கடல் பகுதியில் கடலோர காவல்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் 12 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுன.
கடத்தல்காரர்கள் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே கடல் வழியாக நடக்கும் தங்க கடத்தலை தடுக்கவும் தீவிரவாத கும்பல் ஊடுருவலை கண்காணிக்கவும், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகுகள் மூலம் தினமும் 24 மணி நேரமும் ரோந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இலங்கையில் இருந்து ஒரு நாட்டு படகில் சிலர் தங்கக்கட்டிகளை கடத்தி வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மன்னார் வளைகுடா பகுதிக்கு சென்று நாட்டு படகு வருகிறதா? என்று பார்த்தனர். அப்போது நடுக்கடலில் நாட்டு படகு ஒன்று வருவது தெரியவந்தது. அதில் இருந்த 3 பேர் தங்களை நோக்கி போலீசார் வருவதை கண்டதும், தங்களது படகில் வைத்திருந்த பல கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளை அவசர அவசரமாக கடலில் வீசியுள்ளனர். அவர்களை சுற்றி வளைத்த போலீசார் படகில் தங்கக்கட்டிகள் இல்லாததால் அவர்களிடம் தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அப்போது படகில் இருந்த நபர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த கடலோர காவல்படையினர் நாட்டு படகு நின்ற இடத்தில் தங்கக்கட்டிகள் கடலில் வீசப்பட்டதா? என்பதை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு ஸ்கூபா டைவிங் வீரர்களை அழைத்து வந்து ஆழ்கடலில் மூழ்கி தங்கக்கட்டி பார்சல்கள் உள்ளதா? என்று நேற்று முதல் இன்று காலை வரை விடிய, விடிய தேடி பார்த்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் கடலோர காவல்படையினர் இன்று 2-வது நாளாக தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் தேடியதில் கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. மொத்தம் 12 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கின. அவற்றின் மதிப்பு ரூ.7.50 கோடியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *