அத்தியூத்து அருகே காட்டுப்பகுதியில் பதுக்கிய
ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான ரேசன் அரிசி பறிமுதல்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த அத்தியூத்து விலக்கில் இருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஆலங்குளம் தனிவருவாய் ஆய்வாளர் பேச்சி, வட்டவழங்கல் அலுவலர் ஜெட்லெட் ஜெயா ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் இன்று மதியம் அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தபோது 50 கிலோ எடை கொண்ட 100 ரேசன் அரிசி மூட்டைகள் ஓரிடத்திலும், சற்று தொலைவில் 100 மூட்டைகளும் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. மொத்தம் ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான 200 ரேசன் அரிசி மூட்டைகளை வருவாய் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து ஆலங்குளம் நுகர் பொருள் வாணிபக்கழக கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.
இந்த ரேசன் அரிசி மூட்டைகள் கேரளாவிற்கு கடத்தி செல்ல பதுக்கி வைக்கப்பட்டதா? ரேசன் அரிசி கடத்தல் கும்பல் யார்? என்று உணவு வழங்கல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.