• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சார்பட்டா திரைப்படத்துக்கு குவியும் பாராட்டுக்கள்!…

Byகுமார்

Aug 7, 2021

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ படம் வெளியானது. அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிப் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்வேறு தரப்பினரும் இப்படத்தைப் பார்த்து படக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசனும் சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார். படம் குறித்து பெரிதும் ஆச்சரியப்பட்ட அவர் அந்தப் படக் குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் குழுவினரை வாழ்த்திப் பேசுகையில், “இந்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வரும் அந்தக் குத்துச் சண்டை உலகத்தை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன், எனக்கு தெரிந்தவர்கள், என் நண்பர்கள் பலர் பாக்சர்களாக இருந்திருக்கிறார்கள். எனக்கு படம் பார்க்கும்பொழுது அந்தக் காலகட்டத்தை நேரடியாக பார்ப்பதைப்போல இருந்தது.

இந்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மக்களுக்கு நெருக்கமான ஒரு திரைப்படமாக இருக்கிறது. வெற்றிகரமான ஒரு திரை மொழியோடு மக்களை வெகுவாக கவர்ந்து, மக்களிடம் சென்று சேரும்விதமான ஒரு கூட்டு உழைப்பாக அற்புதமான படமாக இருக்கிறது.

படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பாராட்டும் வகையில் நடித்திருக்கிறார்கள். அவர்களை நான் மிகவும் ரசித்தேன்.

தம்பி பா.இரஞ்சித் தனது கருத்துக்களை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு திரை மொழியை கையாண்டிருக்கிறார், அது ரசிக்கும்விதமாகவும், பாராட்டும்விதமாகவும் இருக்கிறது. இயக்குநர் இரஞ்சித் உள்ளிட்ட குழுவினருக்கு எனது வாழ்த்துக்களும் அன்பும்…” என்று குறிப்பிட்டார்.

தவிர்க்க முடியாத வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குநர் பா.இரஞ்சித், மற்றும் குழுவினருக்கும், இதில் நடித்த நடிகர்கள் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் தமிழ்த் திரையுலகத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கமல்ஹாசனின் இந்த வாழ்த்து பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள் ‘சார்பட்டா பரம்பரை’ படக் குழுவினர்.