தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் கடந்த வாரம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தேனி பழைய பஸ் நிலையத்திலும் , புதிய பஸ் நிலையத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஆய்வின்போது பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பது கண்டறிந்தார் .
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார், இந்நிலையில் இன்று தேனி பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையங்களில் தேனி நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்..
புதிய பஸ் நிலையத்தில் மதுரை மற்றும் திண்டுக்கல் வழித்தடங்களில் செல்லக்கூடிய பஸ்கள் நிறுத்தக்கூடிய கிழக்கு மற்றும் மேற்கு பகுதி பிளாட்பார்ம்களிலுள்ள நகராட்சி கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பயணிகளில் நடை பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மொத்தம் 20 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இருந்தபோதிலும் புதிய பஸ் நிலையத்தில் அரசியல் செல்வாக்கு மற்றும் பணச் செல்வாக்கு மிகுந்த கடை ஒப்பந்ததாரர்களின் கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இப் புதிய பஸ் நிலையம் ஆனது கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியன்று திறந்து வைக்கப்பட்டது.
அப்போது பஸ் நிலையத்திற்காக வடிவம் அமைக்கப்பட்ட கடைகள் பல்வேறு விதமாக சிதைக்கப்பட்டுள்ளது.
பஸ் நிலையத்தில் உள்ள வரைபடத்தின் படி கடைகள் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது .இதில் எந்த ஒரு கடையையும்,சுவரையும் அதன் தன்மையை மாற்றி அமைக்க கூடாது. இதில் எந்த ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும் என்றாலும் மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று அதன் பின்னர் நகராட்சி நிர்வாகத்தின் ஒப்புதலுடன் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.
ஆனால் புதிய பஸ் நிலையத்தில் கடைகளை வாடகைக்கு எடுத்த குத்தகைதாரர்கள் தங்களது அரசியல் செல்வாக்கு மற்றும் பண செல்வாக்கை பயன்படுத்தி கடந்த காலங்களில் நகராட்சிகளின் உடந்தையுடன் நகராட்சி வரைபடத்தை மாற்றியமைத்து தங்களின் சுயலாபத்திற்காக கடைகளை மாற்றி அமைத்துள்ளனர் .இதன் காரணமாக நகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது நடந்துள்ள ஆக்கிரமிப்பு அகற்றம் என்பதே மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் நடந்ததாகக் கூறி உத்தரவின் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறினாலும் வரைபடத்தை மாற்றிய கடைக்காரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சென்றது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி புதிய பஸ் நிலையத்தின் வரைபட கட்டமைப்புகளின்படி கடைகள் உள்ளனவா என்பது குறித்து முறையான ஆய்வு செய்து முறைகேடுகள் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.