தூத்துக்குடியில் துர்நாற்றம் வீசும் தெப்பக்குளத்தை சுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகரில் பிரதான சாலையாக விளங்கும் தமிழ் சாலையில் குரூஸ் பர்னாந்து சிலை அருகே வட்ட தெப்பம் உள்ளது. இந்த வட்ட தெப்பத்தை கடந்த அதிமுக ஆட்சியின்போது புதுப்பிக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது மாநகராட்சி அதிகாரிகள் இந்த வட்ட தெப்பத்தை முறையாக பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தெப்பத்தில் நெடுங்காலமாக தண்ணீர் சுத்தம் செய்யப்படாமல் அதிலுள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன,
இதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் அதிகமான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளும் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி பல்வேறு நோய்களுக்கு வித்திடும் வகையில் உள்ளது. எனவே மாநகராட்சி ஆணையர் உடனடியாக சம்பவ இடத்தை நேரில் பார்த்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.