நெல்லை அதிமுக முன்னாள் மேயர்- தென்காசி அதிமுக முன்னாள் எம்.பி திமுகவில் இணைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் அதிமுக முக்கிய பிரமுகர்கள் தொடர்ச்சியாக திமுகவில் இணைந்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயரும் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான விஜிலா சந்யானந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஷ்வரி திமுகவில் இணைந்தார். இவர் கடந்த 2014ல் அதிமுக சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்தார். தென்காசி தொகுதி அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தவர் வசந்தி முருகேசன். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தேதி டிடிவி தினகரன் அணியில் இருந்த வசந்தி முருகேசன் கடந்த 2017ல் செப்டம்பர் மாதம் 22ம் திடீரென சென்னையில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து அதிமுக அணியில் மீண்டும் இணைந்தார்.
சென்னையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து முன்னாள் மேயர் புவனேஸ்வரி, தென்காசி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வின்போது பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், நெல்லை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ், சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர். நெல்லை தென்காசி மாவட்டங்களில் அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த பெண் பிரமுகர்கள் கட்சியில் இருந்து விலகி தொடர்ச்சியாக திமுகவில் ஐக்கியமாகி வருவதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.