• Fri. Apr 18th, 2025

தனியார் வியாபாரி நெல்லை கொட்டி சென்றது அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

Byadmin

Jul 30, 2021

பாபநாசம் அருகே இரவு நேரத்தில் கொள்முதல் நிலையத்தில் தனியார் வியாபாரி நெல்லை கொட்டி சென்றது அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.780 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கொள்முதல் பணியாளர்கள் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் கொள்முதல் நிலையத்தில் பணியாளர்கள் இல்லாததால், கொள்முதல் நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் 5 ஆயிரம் மூட்டை நெல் தேங்கியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வளத்தாமங்கலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு மட்டையான்திடல், திருவையாத்தங்குடி, புளியமங்களம், கோவிலாம்பூண்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த கோடையில் சாகுபடி செய்யப்பட்ட நெல்லை அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
அப்பகுதியில் 500 ஏக்கரில் நடவு செய்யப்பட்டதில் தற்போது 250 ஏக்கரில் நெல் அறுவடை முடிந்துள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் வளத்தாமங்கலம் கொள்முதல் நிலையத்தில் கொட்டி விற்பனைக்காக வாரக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 24-ம் தேதி இரவு கொள்முதல் பணியாளர்கள் மறுநாள் ஞாயிறு விடுமுறை என்பதால் பூட்டிவிட்டு சென்றனர். அப்போது இரவு நேரத்தில் வெளியூர் வியாபாரி ஒருவர் நெல்லை கொண்டு வந்து மலைபோல் குவித்து வைத்திருந்தார்.
இதையடுத்து 26-ம் தேதி விவசாயிகள் கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகள் உடன் வந்த போது அங்கு வெளியூர் வியாபாரி நெல்லை மலைபோல் குவித்து வைத்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மாவட்ட கலெக்டர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, கேட்பாரற்று காணப்பட்ட நெல் குவியலை 780 மூட்டைகளில் நிரப்பி அதனை பறிமுதல் செய்து, பிள்ளையார்பட்டியில் உள்ள சேமிப்பு கிடங்குக்கு கொண்டு சென்றனர். மேலும் துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து கொள்முதல் அலுவலர் அழகர்சாமி, பட்டியல் எழுத்தர் வி.முருகானந்தம், உதவியாளர் ஏ.ராஜேஷ், காவலர் எல்.வாசுதேவன் ஆகியோரை முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்து கடந்த 27-ம் தேதி உத்தரவிட்டார்.
இதற்கிடையில் கொள்முதல் நிலையத்துக்கு புதிதாக பணியாளர்கள் யாரும் வராததால், அங்கு சுமார் 5 ஆயிரம் மூட்டை நெல்கள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியுள்ளது. தற்போது மழை அவ்வப்போது பெய்து வருவதால் விவசாயிகள் அறுவடை செய்தும் விற்பனை செய்ய முடியவில்லையே என தினமும் காத்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.