சேலம் மாவட்டத்தில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதேபோல் சமீபத்தில் திமுக அரசு கொண்டு வந்த மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டமும் எப்படி செயல்படுகிறது என்பதை பார்வையிட்டு வருகிறார். இன்று சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி சந்தியூர் என்ற கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதனை தொடங்கிவைத்தார். மேலும் மல்லூர், சந்தியூர், ஆட்டையாம்பட்டி பகுதிகளில் முறையான மருத்துவ வசதிகள் கிடைக்கிறதா? என வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினார்.

அங்கிருந்து சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சார்பில் இரண்டு பெரிய திரவ ஆக்ஸிஜன் கொள்கலன்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவருடன் மத்திய மாவட்ட செயலாளர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மருத்துவ துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர்.