• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

அரசை கேள்வி கேட்கும் ஓபிஎஸ்!..

By

Aug 9, 2021

ஆவின் நிறுவனம் எதற்காக தனிநபர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை பால் அட்டைதாரர்களிடமிருந்து கோருகிறது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

மக்களின் இன்றியமையாத் தேவைகளில் ஒன்றாக விளங்கும் பால் அனைவருக்கும், குறிப்பாக ஏழையெளிய மக்களுக்கு, குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் அதன் உற்பத்தியை அதிகரிக்கும் பணியில் ஆவின் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலையடுத்து தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க., தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம், ஆவின் பால் விலையை 16-05-2021 முதல் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்ய ஆணை பிறப்பித்து, அதன்படி தற்போது விற்பனை நடைபெற்று வருகிறது.

இதன்படி, அட்டை வாயிலாக பால் வாங்குவோருக்கு லிட்டர் 37 ரூபாய் விலையிலும், தேவைக்கேற்ப தினசரி பணம் கொடுத்து பால் வாங்குவோருக்கு லிட்டர் 40 ரூபாய் விலையிலும் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து வகையான பால் வகைகளிலும் அட்டை மூலம் பால் வாங்குவோருக்கும், மற்றவர்களுக்கும் இடையேயான வித்தியாசம் மூன்று ரூபாய். இந்தச் சூழ்நிலையில், பால் அட்டை மூலம் பால் வாங்குவோரிடமிருந்து அட்டைதாரர் பெயர், முகவரி, கல்வித் தகுதி, தொழில், மாத சம்பளம், குடும்ப உறுப்பினர்கள், எவ்வளவு காலமாக ஆவின் பால் வாங்கப்படுகிறது.

ஆதார் அட்டை எண் அல்லது குடும்ப அட்டை எண் அல்லது வருமான வரி நிரந்தர கணக்கு எண் அல்லது ஒட்டுநர் உரிம எண் அல்லது வங்கி கணக்கு எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றில் ஒன்று போன்ற விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை ஆவின் நிர்வாகம் கோரியுள்ளதாகவும், இந்தத் தனி நபர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டால்தான் அடுத்த மாதம் முதல் பால் அட்டை வழங்கப்படும் என்றும், இதன் காரணமாக எதிர்காலத்தில் நெருக்கடி ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஆவின் அட்டைதாரர்கள் உள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது.


ஆவின் நிர்வாகம் என்ன காரணத்திற்காக, எதன் அடிப்படையில் இதுபோன்ற விவரங்களை ஆவின் பால் அட்டைதாரர்களிடமிருந்து பெறுகின்றது என்பதைத் தெளிவுபடுத்தாமல், திடீரென்று இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஏனென்றால், தனி நபர் விவரங்களை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக பால் அட்டைதாரர்கள் சந்தேகிக்கின்றனர்.


ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டதையடுத்து, அந்த இழப்பை ஒரளவு ஈடு செய்ய பால் அட்டைதாரர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆவின் நிர்வாகம் இதுபோன்ற மறைமுகமான நடவடிக்கைகளை எடுக்கிறதோ என்ற எண்ணம் பால் அட்டைதாரர்கள் மத்தியில் நிலவுகிறது. இது உண்மையாக இருப்பின், இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.


எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, ஆவின் நிர்வாகம் எதற்காக தனிநபர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை பால் அட்டைதாரர்களிடமிருந்து கோருகிறது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பதையும், ஆவின் பால் அட்டைகள் கேட்பவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதையும், பால் அட்டைதாரர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மறைமுகமாக எந்த நடவடிக்கையையும் ஆவின் நிர்வாகம் எடுக்கக்கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.