சென்னை திருவான்மியூர், பிள்ளையார் கோயில் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் வாரியம் சார்பில் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு, மீதமுள்ள பணிகளை நாளை செய்து கொள்ளலாம் என பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் ஏற்படுத்தாமல், பச்சை நிற துணி போன்ற தடுப்பை மட்டும் வைத்து விட்டுள்ளனர்.

அவ்வழியே வீட்டிற்கு செல்ல நடந்து சென்ற இளம்பெண் ராகினி(21), சாலையின் ஓரம் கால்வைத்த போது மண் சரிந்து பாதாள சாக்கடை சரிசெய்ய தோண்டப்பட்ட பள்ளத்தில் கீழே விழுந்தார்.
இதில் அந்த பெண்ணுக்கு முட்டியில் சிராய்ப்பு காயம் மற்றும் முதுகில் வீக்கமும் ஏற்பட்டது.
உடனடியாக அருகில் உள்ளவர்கள் பள்ளத்தில் விழுந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்ற காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானம் செய்து உங்களுக்குள் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள் என கூறிவிட்டனர்.
குடிநீர் வாரிய உதவி பொறியாளர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சிகிச்சைக்காக பணம் கொடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இரவோடு இரவாக அந்த பள்ளத்தை மூட குடிநீர் வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டனர், அடைப்பை சரிசெய்து பள்ளத்தை மூடும் பணி நடைபெற்று வருகிறது.