உக்ரைன் இளம் ராணுவ வீரர் போர்க்களத்திலிருந்து வெளியிட்டுள்ள வீடியோ உலகம் முழுவதும் அனைவரையும் மனம் கசிய வைத்துள்ளது. இந்த வீரர் பத்திரமாக திரும்ப வேண்டும், போர் நிற்க வேண்டும் என்று பலரும் பிரார்த்திக்கிறார்கள்.
உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்யா. ஏவுகணைத் தாக்குதல், விமானப்படை, கடற்படை என முத்தரப்பிலிருந்தும் அதி வேக தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. போர் வந்தால் தொலைத்து விடுவோம், உக்ரைனை தொட விட மாட்டோம் என்று வாய் சவடால் விட்டு வந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இப்போது கையைப் பிசைந்து கொண்டுள்ளன. காரணம், ரஷ்யாவின் தாக்குதல் அந்த அளவுக்கு அதிரடியாக இருக்கிறது.போரில் பல உயிர்கள் மடிந்து விழுகின்றன. ஊரெங்கும் சிதிலமடைந்து கிடக்கின்றன கட்டடங்கள். எப்போது இந்த போர் நிற்கும் என்று கேட்கத் தொடங்கி விட்டனர் மக்கள். இந்த நிலையில் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. உக்ரைன் வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ அது.
மிகவும் இளம் வயது ராணுவ வீரரான இவர் போர்க்களத்தில் எந்த இடத்திலிருந்து அவர் வீடியோ எடுத்தார் என்று தெரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே பேசுகிறார். “லவ்யூ மாம், டாட் என்று அவர் கூறும் அந்தக் காட்சியைப் பார்த்து பலரும் மனம் வலித்துப் போயுள்ளனர்.அவருடைய தாய் தந்தை மனது இதைப் பார்த்து எந்த அளவுக்கு துடித்திருக்கும். தாய் நாட்டுக்காக தனது உயிரைப் பணயம் வைத்திருக்கும் இந்த வீரனைப் பாதுக்காக வேண்டியது மனித குலத்தின் கடமை என்று பலரும் உருகி வருகின்றனர்.








