• Mon. Mar 9th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பள்ளிக்கு செல்லாமலே 10, 12ஆம் வகுப்பு பயிலலாம்..,

ByKalamegam Viswanathan

Mar 8, 2026

ஏதேனும் காரணங்கள் பள்ளியிலிருந்து இடை நிற்றல் ஏற்பட்டால் அந்த மாணவ, மாணவியரும்கூட 14 வயது பூர்த்தியடைந்தால் தொலைதூரக் கல்வி முறையின் வாயிலாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வினை தாய்மொழியிலேயே தேர்வு எழுதி வெற்றி பெற மத்திய அரசின் தேசிய கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் என்ஐஓஎஸ் (NIOS) வாய்ப்பு தருகிறது.

மத்திய அரசின் பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகத்தின் (PIB) சார்பில் மதுரையில் பத்திரிகையாளர்களுக்கான கருத்தரங்கு தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய தேசிய கல்வி வாரியமான தேசிய திறந்தநிலைப் பள்ளியின் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மண்டல இயக்குநர் வி.சந்தானம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார். அது பின்வருமாறு, 

தேசிய திறந்தநிலை பள்ளி

‘என்ஐஓஎஸ் என்பது மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய தேசிய கல்வி வாரியமாகும். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது. பள்ளியில் பயின்று இடை நிற்கும் (Drop out) மாணவ, மாணவியரின் விடுபட்ட கல்வியைக் கருத்திற் கொண்டு இந்த வாரியம் உருவாக்கப்பட்டது. 

இதில் அடிப்படைக் கல்வியை (Primary Education) வழங்கும் வகையில் முதலாவதாக 3, 5, 8ஆகிய வகுப்புகளை ஒருங்கிணைத்து திறந்தநிலை அடிப்படை கல்விச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அடுத்ததாக பள்ளி இறுதித் தேர்வு (SLC) மற்றும் பள்ளி மேல்நிலைத் தேர்வு (HSC) வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதிகப்படியான மாணவ, மாணவியர் இதில் பங்கேற்கின்றனர்.

60 வகையான தொழிற்கல்வி

இதனைத் தவிர்த்து மாணவ, மாணவியரின் திறன் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்ட 60 வகையான தொழிற்கல்வி வழங்கப்படுகிறது. திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி முறையின் அடிப்படையில் இந்த வாரியத்தில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஏதேனும் காரணங்களால் பள்ளிக்கல்வி விடுபட்டுப் போயிருந்தால், இதில் இணைந்து அதனை முழுவதுமாக தகுதிச் சான்றுடன் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

இந்தத் தேசியக் கல்வி வாரியத்தில் 14 வயது நிறைவடைந்த எவரும் பள்ளி இறுதித் தேர்வில் சேர்ந்து பயிலலாம். இந்தத் திட்டம் வேறு எந்த தேசிய கல்வி வாரியத்திலோ அல்லது மாநிலக் கல்வி வாரியங்களிலோ கிடையாது. காரணம், அரசாங்கத்தின் அனைத்து விதமான உதவிகளைப் பெற வேண்டுமாயின், எஸ்எல்சி சான்றிதழ் மிக மிக முக்கியமானது. இந்த இறுதிக் கல்வி வாய்ப்பினை வீட்டிலிருந்தே பயில நாங்கள் வாய்ப்புத் தருகிறோம்.

90 வயதிலும் சேரலாம்

இதில் சேருவதற்குதான் குறைந்தபட்ச வயது தேவையே தவிர, அதிகபட்ச வயதுக்கு வரம்பு இல்லை. 90 வயதிலும்கூட எஸ்எல்சி பயிலலாம். ஒருமுறை இதில் சேர்ந்துவிட்டால், அடுத்த 5 ஆண்டுகள் வரை கால வரம்பு உள்ளது. அதற்குள் தாங்கள் படித்து முடித்துவிடலாம். அதேபோன்று கணிதவியல், இயற்பியல், வேதியியல்தான் படிக்க வேண்டும் என்ற எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. விருப்பப்பட்ட எந்தப் பாடத்தையும் தேர்வு செய்து பயில முடியும். தமிழ், ஆங்கிலம், இந்தி என ஏதேனும் ஒரு மொழிக் கல்வி இருக்க வேண்டும். பிற பாடங்களைப் பொறுத்தவரை எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.

அதேபோன்று ஏப்ரல்-மே, அக்டோபர்-நவம்பர் என ஆண்டிற்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் எப்போது வேண்டுமானாலும் தேர்வு எழுதிக் கொள்ள முடியும். அதுமட்டுமன்றி, விருப்பத்தின் பேரில் அந்த ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் பொதுத்தேர்வினை எழுதிக் கொள்ள முடியும். தேர்வு முடிவுகள் 45 நாட்களுக்குள் வெளியாகும். 

Transfer on Credit

பொதுவான மாநில, மத்திய கல்வி வாரியத் தேர்வுகளில் பயின்று ஏதேனும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களிலோ தேர்வாகாமல் விட்டிருந்தால், மீண்டும் 5 பாடங்களுக்குத் தேர்வெழுத வேண்டிய அவசியம் இங்கு இல்லை. டிரான்ஸ்பர் ஆன் கிரெடிட் என்ற வாய்ப்பின் மூலமாக, எதில் தேர்வாகவில்லையோ அந்தப் பாடங்களை மட்டும் எழுதினால் போதுமானது. இந்த சிறப்பும்கூட வேறு எந்த கல்வி வாரியங்களிலும் கிடையாது. 12ஆம் வகுப்பில் மட்டும் 42 பாடங்களும் 10ஆம் வகுப்பில் 38 பாடங்களும் இங்கே வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் எது தேவையோ அதைத் தேர்வு செய்து மாணவ, மாணவிகள் பயன்பெறலாம். தமிழ், கணிதம், யோகா, நூலக அறிவியல், கணினி அறிவியல் என எந்த பாடத்தையும் தேர்வு செய்து ஒருங்கிணைத்து இங்கே கல்வி பெறலாம். ஆகையால் இதைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. ஒரு மொழிப்பாடம் அல்லது 2 மொழிப்பாடம் மற்றவை 3 அல்லது 4 பாடங்கள் என 5 பாடங்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே இங்கு உண்டு. இந்த முறையில் மாணவ, மாணவிகள் மிக எளிமையான முறையில் தேர்ச்சி பெற முடியும்.

தனித்திறன் கல்வி

அண்மைக் காலங்களில் மாணவ, மாணவியரின் விருப்பம் எந்தத் துறை சார்ந்து உள்ளதோ, அது சார்ந்து அவர்களை ஊக்குவிக்கின்ற முறை தற்போது உயர்கல்வியில் உருவாகியுள்ளது. உதாரணமாக இசை, விளையாட்டு போன்றவை. இவற்றில் அக்கறை செலுத்தும் மாணவர்களுக்கு பள்ளி சென்று படிக்க இயலாது. அதுபோன்ற மாணவர்கள் என்ஐஓஎஸ்-சில் இணைந்து தங்களது தனித்திறன் பாதிக்காதவாறு வீட்டிலிருந்தவாறே படித்து பயன்பெற முடியும். 

Sign Language

மேலும் சிறப்புக் குழந்தைகளுக்காக மிக எளிமையான முறையில் எஸ்எல்சி மற்றும் பிளஸ்2 தேர்வு பெறுவதற்கு பல சிறப்பான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மணி நேரமும் பொதுத் தேர்வு எழுதும்போது கூடுதலாக 20 நிமிடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. 3 மணி நேரம் தேர்வு எழுத நேர்ந்தால் கூடுதலாக 1 மணி நேரம் அவர்களுக்கு தேர்வு நேரம் ஒதுக்கப்படுகிறது. எழுத இயலாத சிறப்பு மாணவர்களுக்கு, உதவியாள் (ஸ்கிரைப்) வைத்துக் கொள்ள முடியும். செயல்முறைத் தேர்வில் அவர்களுக்கான தேவையான வசதிகள் செய்து தரப்படுகின்றன. எழுத இயலாது கணினியில்தான் தட்டச்சு செய்ய முடியும் என்றாலும் அதற்கும் இங்கே வாய்ப்புகள் உண்டு. ஸைன் லாங்குவேஜ்ல் எழுதக்கூடிய வசதியும் உண்டு. அதனை ஒரு மொழிப்பாடமாகவே நாங்கள் வைத்துள்ளோம்.

NCERT Syllabus

மத்திய அரசின் என்சிஇஆர்டி பாடத்தை அடிப்படையாகக் கொண்டு இங்கு பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாநில பாடத்திட்டத்திற்குள் இது வராது. தொலைதூரக் கல்வி முறையின் வாயிலாகவே இங்கு தேர்வுகளும், வகுப்புகளும் நடைபெறுகின்றன. இந்தியாவில் தொலைதூரக் கல்வியின் வாயிலாக வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களும் பொதுக்கல்வி முறையில் படித்துப் பெறப்படும் சான்றிதழ்களுக்கு ஒப்பானதே. வேலைவாய்ப்பு, உயர்கல்வி, பதவி உயர்வு என அனைத்திற்குமே சமமான தகுதியே வழங்கப்படுகிறது. 

22 மொழிகள்

தேசிய கல்வி வாரியமான என்ஐஓஎஸ்-சில் மட்டும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட சைன் லாங்குவேஜ் உட்பட 22 மொழிகளில் பயில இங்கு வாய்ப்பு உள்ளது. இதில் எது விருப்பமோ அதைத் தேர்வு செய்து பயிலலாம். எஸ்எல்சியோ அல்லது பிளஸ் 2விலோ இங்கு சேரும்போது ஆங்கில வழியை தேர்வு செய்துவிட்டு, தமிழில் தேர்வு எழுத வேண்டுமென்றாலும் எழுதலாம். அதில் எந்தவித தடையோ கட்டுப்பாடுகளோ இல்லை. மேற்கண்ட 22 மொழிகளில் எதில் வேண்டுமானாலும் எழுதலாம். 

தொழிற்படிப்புகள்

மேலும் இதனைத் தவிர்த்து அவர்களின் வேலைவாய்ப்பைக் கருத்திற் கொண்டு, 60 வகையான தொழிற் கல்வியும் இங்கே வழங்கப்படுகிறது. Beautician Course, Cutting Tailoring, கம்ப்யூட்டர் சைன்ஸ், செயற்கை நுண்ணறிவு, Data Science, இருசக்க வாகன பழுது, யோகா ஆசிரியர் உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் இங்கே வழங்கப்படுகின்றன. இவை அனைத்துமே வேலைவாய்ப்புக்குரிய தொழிற்படிப்புகளாகும். 

குறைந்த கட்டணம்

மத்திய அரசால் நடத்தப்படுகின்ற இந்த என்ஐஓஎஸ்-சில் சேருவதற்கு கட்டணம் மிக மிகக் குறைவு. உதாரணமாக பிளஸ்2 பொதுப்பிரிவில் சேர்கின்ற மாணவர்களுக்கு ரூ.4,500லிருந்து 4,800 வரை தான். பட்டியல் சமூகத்தவர், முன்னாள் ராணுவ வீரர், மூன்றாம் பாலினத்தவருக்கு கட்டணச் சலுகை உண்டு. கட்டணம் மிகக் குறைவுதான். ஆனால் இங்கு பெறுகின்ற சான்றிதழ்கள் சிபிஎஸ்சிக்கு நிகரானவை. உயர்கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கும், பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கும் இந்த சான்றிதழ் உலகத் தரம் வாய்ந்தது ஆகும். உலகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ஐஓஎஸ் சான்றிதழ்கள்’ என்றார்.