• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உலகின் மிகப் பிரம்மாண்ட மஹாசிவராத்திரி விழா – மார்ச் 8-ல் ஈஷாவில் கோலாகலம்

BySeenu

Mar 4, 2024

உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா, கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன.

மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கி செல்வதற்கு உதவி புரிகிறது. இந்த நோக்கத்தில் தான் மஹாசிவராத்திரி விழா நம் பாரத கலாச்சாரத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஈஷாவில் 30-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது. சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

இவ்விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்து கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

இதில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம், பஞ்சாபி இசை கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசை கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசை கலைஞர்கள் ப்ரித்வி கந்தர்வ், ரஞ்ஜித் பட்டரசர்ஜி, பாரடெக்ஸ் (தனிஷ்க் சிங்) உள்ளிட்ட தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதுதவிர, ஆப்பிரிக்கா, லெபனான், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இசை மற்றும் நடன குழுவினரும் அரங்கை அதிர செய்ய உள்ளனர்.

ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. கோவை தவிர்த்து மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாகர்கோவில் உட்பட தமிழ்நாட்டில் 36 இடங்களில் இவ்விழா நேரலை ஒளிபரப்பாக கொண்டாடப்பட உள்ளது.