பொள்ளாச்சியில் கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் ஈஷாCBE அறக்கட்டளையால் பயிற்சி அளிக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் பல்வேறு வயது பிரிவுகளில் பரிசுகளை வென்று அசத்தி உள்ளனர்.

அவனே செஸ் அசோசியேஷன் சார்பில் பொள்ளாச்சி உடுமலை பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) கோவை மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர், மாணவிகள் என இருபாலருக்கும் பல்வேறு வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் ஈஷா மூலமாகப் பயிற்சி அளிக்கப்பட்ட 27 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 9 மாணவர்கள் பரிசு வென்று அசத்தினர்.
இதில், 7 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மத்வராயபுரத்தைச் சேர்ந்த எழில்மதி மற்றும் சம்யுக்தா ஆகியோர் வெற்றி பெற்றனர். அதேபோல், 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஜெயசூர்யா, பிரனிஷ் ஆகியோரும், பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த சத்யா மற்றும் பூளுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த நந்தனா, நந்தித்தா, பிரனிதா உள்ளிட்டோரும் வெற்றி பெற்றுப் பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.

ஈஷாவில் துறவியாக இருக்கும் சுவாமி தத்யா, ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில் வசிக்கும் மாணவர்களுக்கு செஸ் விளையாட்டில் பயிற்சி அளித்து வருகிறார். இதனுடன் மாணவர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்கத் தேவையான உதவிகளும், வழிகாட்டுதல்களும் ஈஷா மூலமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








