பிக் பாஸ் சீசன் 13 டைட்டில் வின்னரான நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 40. நடிகர் சித்தார்த் சுக்லா நேற்று இரவு தூங்குவதற்கு முன் சில மருந்துகளை சாப்பிட்டதாகவும, அதன் பிறகு அவர் எழுந்திருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. அவரை உடனடியாக கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர், கூப்பர் மருத்துவமனையின் அறிக்கையின் படி, சித்தார்த் சுக்லா இன்று காலை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என தெரிவித்தது. சித்தார்த் சுக்லாவின் திடீர் மறைவால் ஒட்டுமொத்த பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி துறையும் சோகத்தில் உள்ளது. அனைத்து நடிகர், நடிகைகளும் சித்தார்த் சுக்லாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சித்தார்த் சுக்லா, பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 13 வது சீசனில் வெற்றி பெற்றார். இது தவிர கத்ரோன் கே கிலாடியின் ஏழாவது சீசனையும் வென்றார். “பாலிகா வடு” சீரியல் மூலம் சித்தார்த் சுக்லா நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் தனது முத்திரையை பதித்தார்.
மும்பையில் 12 டிசம்பர் 1980 இல் பிறந்த சித்தார்த் சுக்லா ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2004 ஆம் ஆண்டில், அவர் தொலைக்காட்சியின் மூலம் நடிகராக அறிமுகமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது தான் பாலிவுட் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்த நிலையில், இப்படி திடீரென மாரடைப்பு காரணமாக சித்தார்த் சுக்லா மரணமடைந்ததை அறிந்த பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.