மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் தாலுகா அலுவலகம் பின்புறம் துவங்கி கச்சை கட்டி பிரிவுக்கு முன்பாக தேசிய நான்கு வழி சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கட்டுமான பணி முடித்து தற்போது திறப்பதற்கு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இந்நிலையில் வாடிப்பட்டி, கச்சைகட்டி பகுதியில் இருந்து சோழவந்தான் செல்வதற்கு திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் பெரியார் பாசன கால்வாய் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு பாதை வழியாக சோழவந்தான் பிரிவிற்கு மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும்.


இந்நிலையில் தற்போது மேம்பாலம் கட்டும் பணி முடிந்து செயல்பாட்டுக்கு வருவதால் அந்த தடுப்பு பாதை முழுவதுமாக அடைக்கப்பட உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்
சோழவந்தான் பிரிவுக்கு செல்வதற்கு ஆண்டிபட்டி பங்களாவில் இருந்து 1 கி.மீ. தூரம் சுற்றி சென்று கட்டக்குளம் பிரிவு வரை சென்று மீண்டும் மதுரை திண்டுக்கல் சாலையைக் கடந்து ஆண்டிபட்டி பெட்ரோல் பங்க் வழியாக சோழவந்தான் பிரிவுக்கு செல்ல வேண்டும்.

இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாவார்கள். மேலும் பெரியார் பாசன கால்வாய் அருகில் உள்ள சாலை தடுப்பை அடைப்பதால் ஆண்டிபட்டி பங்களா சின்னம்மநாயக்கன்பட்டி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், துக்க நிகழ்ச்சிகளில் பிரேத ஊர்வலம் செல்வதற்கும் சோழவந்தான் பிரிவை கடந்து மேட்டு நீரேத்தான் அருகில் உள்ள மயானத்திற்கு செல்ல 1 கி.மீ தூரம் கட்டக்குளம் பிரிவு வரை சென்று தான் திரும்ப வர வேண்டும். இதனால் காலவிரையமும் பொது மக்களுக்கு சிரமமும் ஏற்படும்.
இதை கருத்தில் கொண்டு மேம்பால பணியை பெரியாறு பாசன கால்வாய் கடந்து வனத்துறை அலுவலகம் வரை விரிவுபடுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் அதை நிராகரித்து விட்டனர். இதனால் தற்போது சாலை தடுப்பு அடைப்பை அடைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்வதற்கு முடிவு செய்துள்ளனர்.




