• Sun. May 12th, 2024

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி.., மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தார்…

BySeenu

Feb 4, 2024

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தார்.

இதேபோல், கேரளா மற்றும் தமிழக பாராளுமன்ற பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கோவை விமான நிலையம் வந்திருந்தார்.

அவரை சந்தித்த பிறகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

‘இன்று தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் தலைமையில் காலையில் கேரள மாநிலத்திலும் பிற்பகல் தமிழகத்திற்கான மாநாடு கோவையிலும் நடைபெற உள்ளது.

தேசிய தலைவர்கள் வரும்பொழுது அவர்களின் வசதிக்கேற்ப இரு மாநிலத்திற்கும் அருகாமையில் இருக்கக்கூடிய இடங்களில் நிகழ்ச்சிகள் நடப்பது இயல்பு.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சிப் பணிகளை முடக்கிவிடும் வகையில்
தமிழக பாராளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் கோவையில் இன்று நடைபெற உள்ளது. அதில் தேர்தலை எப்படி எதிர்கொள்வது மற்றும் தயாரிப்புகள் குறித்து தேசிய தலைவர்கள் அறிவுரை வழங்குவார்கள்.

கூட்டணியை பொறுத்தவரை தேசிய தலைமை முறையான அறிவிப்பு வெளியிடுவார்கள்.

எத்தனை கட்சிகள் கூட்டணியில் வருகிறார்கள், யார் யாரெல்லாம் வருகிறார்கள், எப்போது வருகிறார்கள் என தேசிய தலைமை தெரிவிக்கும்.

வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேசிய தலைமை மற்றும் பாராளுமன்ற குழு அறிவிப்பார்கள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரும்பி கோவையில் போட்டியிட்டால், அதற்கான வேலைகளை செய்ய தயாராக உள்ளோம்.

நடிகர் விஜய் கட்சி துவங்கினாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு பெறவில்லை என்றும் கவனிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே என்னைப் பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் அவரது பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். 2026 இல் பணிகள் வேகம் எடுக்கும் எனவும் இப்போது கவனிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2014 தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்து கிட்டத்தட்ட 19 சதவீத வாக்குகள் பெற்றதோடு, கன்னியாகுமரி மற்றும் தர்மபுரியில் வெற்றி பெற்றோம். எனவே, மூன்றாவது அணி அல்லது திமுக, அதிமுக அல்லாத மற்ற கட்சிகள் வர முடியாது என்பது ஏற்கனவே பொய்யாகி இருக்கிறது.

தேசத்தின் ஒற்றுமை அல்லது தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது என்.ஐ.ஏ ஆய்வு காட்டி கொடுத்துள்ளது.

இதுவரை, தமிழக காவல்துறையினர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்.ஐ.ஏ அவர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்த பிறகு, நாட்டிற்கு எதிராக செயல்கள் செய்திருப்பதை உறுதிப்படுத்திய பிறகு கைது செய்து இருக்கிறார்கள்.

என்.ஐ.ஏ என்பது தேசத்திற்கும் தேச ஒற்றுமைக்கும் எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது.

இந்த நாட்டை பாதுகாக்கும் மிக முக்கியமான அமைப்பு தேசிய புலனாய்வு முகம்மை. நாட்டில் தீவிரவாதம், பயங்கரவாதம், தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக உள்ளது. அந்த அமைப்பு அவர்களது வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.

தவறு செய்பவர்களிடம் கேள்வி கேட்கும் போது, ‘என்னை மிரட்டுகிறார்கள்.. என்னை காப்பாற்றுங்கள்’ என அலறுவார்கள். அதைத்தான் இப்போது தவறு செய்தவர்கள் (சீமான்) செய்கிறார்கள்’ என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *