• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவுக்கு வைரமுத்து கருத்து

ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவு சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், ஊசியில் நூலன்று; ஒட்டகம் நுழையாது என்ற கவிஞர் வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு வைரலாகி உள்ளது. மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற குழு அளித்துள்ள வாக்குறுதியின்படி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலகப் பதிவேடுகள், பணியாளர் புத்தகம், பணியாளர் பதிவுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே இவை அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற இயக்குநர் உத்தரவுக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், கடைசியில் இந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது; வருந்துகிறோம். இந்தி படிப்போரை வெறுக்கமாட்டோம்; திணிப்போரை ரசிக்கமாட்டோம். ஒருமைப்பாடு சிறுமைப்படாதிருக்க நாட்டின் பன்மைக்கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் சிலர் நுழைக்கப்பார்ப்பது ஊசியில் நூலன்று; ஒட்டகம் நுழையாது எனத் தெரிவித்துள்ளார். வைரமுத்துவின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.