• Fri. May 3rd, 2024

பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை மோசடி வழக்கில்.., திருச்சி கிளை மேலாளர் கைது..!

Byவிஷா

Oct 21, 2023

பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைகளில் இதுவரை 14 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், அந்த நகைக்கடையின் திருச்சி கிளை மேலாளர் கைது செய்யப்பட்டள்ளார்.
திருச்சி புதிய கரூர் பைபாஸ் ரோட்டில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும் இயக்குனர்களாக இருந்து நடத்தி வந்தனர். இவர்கள் குறுகிய காலத்தில் திருச்சியை தலைமை இடமாக கொண்டு, திருச்சி மலைக்கோட்டை, சென்னை குரோம்பேட்டை, வேளச்சேரி, மதுரை, கோவை, ஈரோடு, கும்பகோணம், நாகர்கோவில் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் 9 கிளைகளை தொடங்கி நடத்தி வந்தனர். இந்த நகைக்கடைகளில் நகை வாங்கினால் செய்கூலி, சேதாரம் இல்லை எனவும், பல நகை சிறுசேமிப்பு மற்றும் தங்க முதலீட்டு திட்டங்கள் இருப்பதாக துண்டு பிரசுரங்கள் மூலமும், நடிகர், நடிகைகள் மூலமும் பெரிய அளவில் விளம்பரம் செய்தனர். அத்துடன் முதலீட்டு திட்டங்களுக்கு அதிக வட்டி மற்றும் போனஸ் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி ஏராளமான பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கும், சீட்டு போட்டவர்களுக்கும் பணத்தை கொடுக்காமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி உள்பட 9 நகைக்கடைகளையும் பூட்டிவிட்டு, அதன் இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பிரணவ் ஜூவல்லர்ஸ் இயக்குனர்கள் மதன், அவருடைய மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் உள்பட நிர்வாகிகள் மீது திருச்சி, சென்னை, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இதுவரை தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 635 பேர் தங்களை பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர் ஏமாற்றி விட்டதாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் ரூ.14 கோடி மோசடி செய்துள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் மேலாளர் நாராயணன் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்திய போலீசார், நேற்று இரவு மதுரையில் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஐ.ஜி. சத்தியபிரியா உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள 8 நகைக்கடைகள் மற்றும் இயக்குனர்களின் வீடுகள் என்று 11 இடங்களில் அந்தந்த பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். திருச்சியில் மட்டும் 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில் 2 நகைக்கடைகளில் இருந்தும் சுமார் 5½ கிலோ வெள்ளி மற்றும் 11 பவுன் நகை கள்மட்டுமே கிடைத்துள்ளது. அதுவும் சாதாரண கல் பதித்த தங்கநகைகள் தான். மேலாளர் நாராயணன் வீட்டில் ரூ.50 ஆயிரம் இருந்தது. மற்ற இடங்களில் எதுவும் சிக்கவில்லை.
தமிழகம் முழுவதும் உள்ள பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைகளில் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 711 மற்றும் 22 கிலோ வெள்ளி, 237½ பவுன் நகைகள் சிக்கியது. மேலும், முதலீடு செய்த பணத்தை இயக்குனர் மதன் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நிலங்கள் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த சொத்துகளை கைப்பற்ற பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளின் உதவியை நாடியிருப்பதாகவும், தலைமறைவாக உள்ள மதன், கார்த்திகாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். விரைவில் அவர்கள் கைது செய்யபட்டு சட்ட ரீதியான தண்டனைகள் வழங்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *