• Wed. Jan 22nd, 2025

நிணநீர் அழற்சி விழிப்புணர்வை அதிகரிக்க, கோவை கங்கா மருத்துவமனை சார்பில், நிணநீர் அழற்சி கண்காட்சி…

BySeenu

Mar 5, 2024

கோவையில்நிணநீர் அழற்சி விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் கங்கா மருத்துவமனை சார்பில் நிணநீர் அழற்சி கண்காட்சி நடைபெற்றது. இதனை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் துவக்கி
வைத்தார்.

உடலில் நிணநீர் ஓட்டம் தடைபடுவதால் கைகால்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. நிணநீர் என்பது புரதம் மற்றும் வெள்ளை ரத்த அணுக்கள் கொண்ட ரத்த நாளங்களில் இருந்து எழும் ஒருவித திரவமாகும்.
புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை, பைலேரியாசிஸ் என்னும் கொசு கடியால் ஏற்படும் நோய், உடலில் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் சில சமயங்களில் நிணநீர் பாதைகளில் மிகக் குறைவான ஓட்டம் உள்ளிட்ட பிறவிப் பிரச்சினைகள் போன்றவற்றின் காரணமாக இந்த நிணநீர் மண்டலங்கள் பாதிக்கப்படுகின்றன.
நிணநீர் பிரச்சினை காரணமாக மூட்டுகளில் வீக்கம் அதிகரிக்கும் போது, நோயாளிகள் தங்கள் கை மற்றும் கால் விரல்களை அசைப்பது மற்றும் கால்களை நகர்த்துவது மிகவும் கடினமாக இருக்கும். இதுநோயாளிகளின் உடல் செயல்பாட்டை கட்டுப்படுத்துவதோடு, அவர்களை எந்தவித பணியும் செய்ய விடாமல் தடுக்கிறது. இந்த தொற்றானது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. இந்த நோய்
காரணமாக ரத்த சோகை ஏற்பட்டு பலர் இறக்கவும் நேரிடுகிறது. இந்நிலையில் நோயாளிகள் தகுந்த நேரத்தில் முறையான சிகிச்சையைப் எடுக்கும்போது, நிணநீர் அழற்சியை நிச்சயமாகக் கட்டுப்படுத்தலாம் என்பதால் கட்டி அதிகரிக்கத் தொடங்கும்போது அதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.

எனவே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 4 முதல் 10 வரை நிணநீர் அழற்சி
விழிப்புணர்வு வாரமும், மார்ச் மாதம் நிணநீர் அழற்சி விழிப்புணர்வு மாதமாகவும்
கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில திட்ட அலுவலர் டாக்டர் எஸ். மருதுதுரை முன்னிலை வகித்தார்.