அசாமில் இருந்து கோவைக்கு ரயிலில் கடத்திய 55 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்ததுடன் வடமாநில வாலிபர்கள் மூன்று பேரை கைது செய்தனர்.
மேற்கு வங்காளம் பீகார் அசாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுவதை தடுக்க கோவை ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை ரயில்வே போலீசார் அசாம் மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் ரயிலில் ஏறி சோதனை செய்தனர். அப்பொழுது முன்பதிவு இல்லாத டிக்கெட்டில் பயணம் செய்யும் பெட்டியில் மூன்று பேர் சந்தேகப்படும்படியாக இருந்தனர்.
உடனே காவல்துறையினர் அந்த மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாலஷ் மொண்டல், மீதும் சர்க்கார், ரோகித் தாஸ் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அசாம் மாநிலத்தில் இருந்து கோவைக்கு கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்கள் கடத்தி வந்த 55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கைதான மூன்று பேர் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா கோவையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.




