• Wed. Feb 25th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

ஆக்கிரமிப்பாளர்கள் சுடுகாட்டையும் விட்டு வைக்கவில்லை..,

Byமுகமதி

Jan 10, 2026

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே உள்ள ஆலங்காப்பட்டி என்ற கிராமத்தில் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த மக்கள் இதுவரை பயன்படுத்தி வந்த சுடுகாட்டையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து தென்னை மரங்களை நட்டு விட்டார்கள், எங்களது பிணத்தை இனி எங்கே கொண்டு போய் புதைப்போம் என வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆலங்காப்பட்டி கிராமத்தில் 50 தலைக்கட்டுக்கு மேல் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் காலம் காலமாக ஊருக்கு தென்புறம் உள்ள புறம்போக்கு நிலத்தில் சுடுகாடாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அண்மைக்காலமாக அந்தப் பகுதியை ஒரு சிலர் ஆக்கிரமித்து பத்திரங்களும் தயாரித்து தற்போது ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து விவசாயமும் செய்து வருகிறார்கள். அந்த நிலங்கள் தற்போது தென்னந்தோப்புகளாகவும் தைல மர காடுகளாகவும் வளர்ந்து இருக்கின்றன.

இந்த நிலையில் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களை பாடையில் தூக்கிக்கொண்டு தைல மரக்காடு பகுதியில் கன்றுகளை வெட்டிப்போட்டு விட்டு இடுகாட்டுக்கு போய் பிணத்தை அடக்கம் செய்து வருவது வழக்கமாக இருந்திருக்கிறது. தற்போது அந்தப் பாதையை மறித்து முள்வெட்டிப் போட்டு வைத்திருப்பதோடு நிலத்திற்குள் இறங்க கூடாது என்று சொல்லிவிட்டார்களாம்.

இது குறித்து அந்த மக்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடத்தில் குறைகள் தீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனுக்களாக கொடுத்து வந்திருக்கிறார்கள். தொடர்ந்து மனு கொடுத்ததன் பலனாக தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்று இருக்கிறார்கள். என்ற போதிலும் இடுகாட்டுக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமித்ததோடு தற்போது இடுகாட்டையும் விவசாய நிலங்களாக மாற்றி வைத்திருப்பதால் கொஞ்சம் இருக்கும் இடத்தில் ஒன்று மேல் ஒன்றாக பிணத்தை புதைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று அந்த கிராம மக்கள் வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் அந்த அரசு புறம்போக்கு பகுதியில் சுடுகாடாக இருந்த பகுதியை வேலியமைத்து அதில் இடுகாட்டு கொட்டகை ஒன்று அமைத்து சுடுகாட்டுக்கான எல்லை ரத்து செய்து கட்டித் தர வேண்டும் என்பதே அதற்கு செல்வதற்கு பாதை வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள். சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமித்து இருப்பதோடு சுடுகாட்டையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆட்டையை போட்டு விட்டார்கள் என்று ஆதங்கப்படுகிறார்கள் ஆலங்காப்பட்டி கிராம விஸ்வகர்மா சமூக மக்கள்.