தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் மாலை 4 மணி வரை கடுமையான வெப்பம் வாட்டி வதைத்தது. பின்னர் மாலையில் இதமான காற்று வீச தொடங்கி ஜில்லென்று குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதன் பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது மழை.

இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சேர்வீடு, வேலம்பட்டி, கோவில்பட்டி, கல்வேலிபட்டி, உலுப்பகுடி, அம்மன்குளம், மெய்யம்பட்டி, பள்ளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.





