• Wed. May 8th, 2024

கேரள சட்டசபையில் சுருக்கமாக முடிந்த ஆளுநர் உரை..!

Byவிஷா

Jan 25, 2024

கேரள சட்டசபைக் கூட்டத்தொடரின் தொடக்க நாளான இன்று, ஆளுநர் ஆரீப் முகமது கான் தனது உரையை சுருக்கமாக வாசித்தது சட்டமன்ற உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள அரசுக்கும், அம்மாநில ஆளுநருக்கும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கேரளா பல்கலைக்கழகம் செயல்படுவது குறித்தும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களில் அவர் கையெழுத்திடாமல் இருப்பது குறித்தும் ஆளுநருக்கும், அரசுக்கு இடையே மோதல்போக்கு ஏற்பட்டு வருகிறது.
கேரளா சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று முதல் வருகின்ற 27-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் நாள் கொள்கை அறிக்கை தொடர்பாக ஆளுநர் வாசிக்கும் நிகழ்வு நடைபெறும் என கூறப்பட்டது. இதைத்தொடந்து, இன்று சட்டமன்ற வாசலில் பூங்கொத்துகளுடன் கவர்னருக்காக முதல்வர் மற்றும் சபாநாயகர் காத்திருந்தனர். ஆளுநர் உரிய நேரத்தில் வந்து முதலமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் இருந்து பூங்கொத்துகளை பெற்றுக்கொண்டார்.
ஆனால், முதலமைச்சரின் முகத்தைப் பார்க்கவோ, புன்னகையைப் பரிமாறிக்கொள்ளாமல் ஆளுநர் கைகுலுக்கிவிட்டு சட்டமன்றத்திற்குள் சென்றார். கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் உரையாற்றும் போது கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தனது உரையை சுருக்கி கொண்டு கடைசி பத்தியை மட்டும் வாசித்தார்.
சபையில் இருந்த அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தனது உரையை ஆரம்பித்த ஆளுநர்” 15-வது கேரள சட்டமன்றத்தின் 10-வது கூட்டத் தொடரின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கேரள மக்களின் பிரதிநிதிகளின் இந்த உயரிய குழுவில் உரையாற்றுவது எனது மரியாதை. இப்போது கடைசிப் பத்தியைப் படிப்பேன் என கூறி கடைசி பத்தியை மட்டும் வாசித்தார்.
இதனால் கேரளா ஆளுநர் சபை கூட்டத்தொடரில் 1.17 நிமிடத்தில் தனது உரையை நிறைவு செய்தார். ஆளுநரின் இந்த செயலால் கேரளா சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 136 பக்கங்கள் கொண்ட கொள்கை அறிக்கையின் 135 பக்கங்களை ஆளுநர் புறக்கணித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *