• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மருதமலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு நான்காவது நாளாக சிகிச்சை…

BySeenu

Jun 2, 2024

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. அப்போது இருந்து அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த யானையுடன் நான்கு மாத ஆண் குட்டி யானையும் இருந்ததால் அந்த குட்டி யானையை வைத்துக் கொண்டே சிகிச்சையானது அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானையை கிரேன் வாகனத்தின் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்டு சிகிச்சையை தொடர்ந்து அளித்து வருகின்றனர். அந்த யானைக்கு சத்து மாத்திரைகளை புளி வெல்லம் ஆகியவற்றுடன் இடித்து அரிசி சோற்றில் வைத்து அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் குட்டி யானை அங்கிருந்து சென்ற நிலையில் அந்த குட்டி யானையை கண்காணிக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று இரவு குட்டி யானை உட்பட 3 காட்டு யானைகள் அங்கு வந்து சென்றதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது அந்த யானை தாமாக உண்ண துவங்கி உள்ள நிலையில் கிரேன் உதவியில்லாமல் தாமாக நின்று நடந்து செல்லும் வரை இந்த சிகிச்சைகளானது தொடரும் என கால்நடை மருத்துவர்களும் வனத்துறையினரும் தெரிவித்துள்ளனர். அதேபோல் அந்த குட்டி யானை திரும்பி வரும் பட்சத்தில் இரண்டு யானைகளையும் சேர்த்து அடர் வன பகுதிக்குள் அனுப்புவதற்கு வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.