இறைவனைக் காட்டிலும் இறைவனின் திருவடி உயர்ந்தது என ஆன்மீகப் பேச்சாளர் கலைமாமணி நாகை முகுந்தன் பேசினார்.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு எஸ்.எஸ்.காலனி, எஸ். எம். கே திருமண மண்டபத்தில் கலைமாமணி நாகை முகுந்தனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
நேற்று அவர் ‘திருவடி சூடிய திருமுடி’ என்ற தலைப்பில் பேசியதாவது;
ராமாயணத்தில் எல்லாம் வல்ல பரம்பொருளாக இருக்கிற ராமபிரானை கங்கை கரையில் பரதன் வந்து சந்தித்தான் பரதன் சந்தித்ததற்கு காரணம் ராமனிடம் ஆட்சியை ஒப்படைத்து அயோத்திக்கு அழைப்பதற்கு திட்டம் கொண்டான்.ஆனால் ராமபிரான் வர மறுக்க கடைசியில் ராமனுடைய பாதுகையை பெற்றுக்கொண்டு பாதுகைக்கு முடி சூட்டி ராமனின் பிரதிநிதியாக பரதன் இருந்தான்.
திருவடி இறைவனை காட்டிலும் உயர்ந்தது. அதனால் தான் பெரியாழ்வார் மரவடியை வான் பணயம் வைத்து என குறிப்பிடுகிறார். பணயம் என்று சொன்னதற்கு காரணம் திருவடியை பரதனிடம் அடகாக கொடுத்து தன்னை மீட்டுக் கொண்டான் என்பது பொருள்.
சாதாரணமாக நமக்கு 2000 ரூபாய் வேண்டுமென்றால் ரூபாய் ஐந்தாயிரம் பெருமான பொருளை அடகாக கொடுப்பது வழக்கம். எனவேதான் பெரியாழ்வார் பணயம் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். எனவே இறைவனை காட்டிலும் இறைவனின் திருவடி உயர்ந்தது.
அதனால் தான் வள்ளுவர் கூட கடவுள் வாழ்த்தில் திருவடி பற்றி அதிகமாக குறிப்பிடுகிறார். கடவுள் வாழ்த்தில் 10 திருக்குறளில் ஏழு திருக்குறள் இறைவனின் திருவடி பற்றியதாக இருக்கும்.கற்றதனால் ஆய பயன் கொல் வானறிவன் நற்றாள் தொழார் எனில் மற்றும் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்
எனவே இறைவனின் திருவடியை பற்ற வேண்டும் என்பதை வள்ளுவரும் வலியுறுத்துகிறார்.
ஆகவே தான் நம்முடைய தெய்வங்களின் கைகள் ஏராளமாக இருக்கும், முகங்களும் 3, 5, 6, 7 என்றெல்லாம் இருக்கும், ஆனால் திருவடி மட்டும் இரண்டே இரண்டு இருக்கும். என்ன காரணம் என்றால் இரண்டு கையை உடைய மனிதன் அவனும் திருவடியை பற்றி கொண்டு உயர்வதற்கு வழியாக கால்களை இரண்டாக கொண்டார்.
இறைவன் அப்படி கால்களை பற்றி கொண்டு கதறும் மனிதனுக்கு, அருளை வாரி வழங்குவதற்கு கைகளை அளவாக கொண்டார். எனவே நாமும் இறைவனின் திருவடியை பற்றுவோம். வாழ்க்கையில் உயர்வு அடைவோம். இவ்வாறு நாகை முகுந்தன் பேசினார்.
இன்று (ஏப்ரல்.5) தவம் செய்த தவம் என்ற தலைப்பில் சொற்பொழிவு மாலை 6:30 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.