குமரியில் யானை மீது துயில் கொண்ட பாகனின் தூக்கத்தை கலைக்க விரும்பாத யானை ஒரே இடத்தில் பல மணிநேரம் நின்றுகொண்டு இருந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே குடிபோதையில் யானையின் மேல் படுத்து உறங்கிய பாகன். சாலையோரம் நின்ற யானையால் பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் அவதி. வனத்துறையினர் யானையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் சிலர் யானைகளை வளர்த்து வருகின்றனர். இந்த யானைகள் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டில் அனுபமா என்ற பெண் யானையை வளர்த்து வருகிறார். இந்த யானையை அதன் பாகன்கள் இருவரும் அருமனை அருகே உத்தரங்கோடு பகுதியில் தென்னை மரத்தில் இருந்து ஓலைகளை வெட்டுவதற்காக அழைத்துச் சென்றனர்.

அப்போது பாகன்களில் ஒருவரை திடீரென காணவில்லை. மற்றொருவர் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் யானை அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஒரு கட்டத்தில் பாகன் யானையின் மேல் படுத்து உறங்கியுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக யானை மேல் படுத்து உறங்கி உள்ளார். அப்போது யானை எங்கும் செல்லாமல் சாலையோரம் நின்று கொண்டிருந்தது.
இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அசமடைந்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் களியல் வலச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். வனச்சரக அலுவலர் முகைதீன் தலைமையில் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று யானையை பறிமுதல் செய்தனர். பின்னர் வனத்துறை அலுவலகத்திற்கு யானையை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். இதுகுறித்து யானை பாகனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வனத்துறையினர் கொண்டுவந்த வாகனத்தில் ஏறி மறுத்து. யானை, பாகன்கள் இருவரும் முன்னால் நடந்து செல்ல யானை அனுபாமா அண்டுகோடு முதல் அருமனை வழியாக திற்பரப்புக்கு நடந்தே சென்றது. வனத்துறையினர் யானையின் உரிமையாளர், இரண்டு பாகன்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.