• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மதச்சார்பின்மையை அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான தேர்தல்.., பிரகாஷ்காரத் தெரிவித்துள்ளார்!

BySeenu

Apr 9, 2024

கோவை தேர்நிலைத் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கலந்து கொண்டு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுகவின் கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது சந்திக்க உள்ள 18 வது நாடாளுமன்றத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல, இந்தத் தேர்தல் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாக்க கூடிய தேர்தல். இந்தியா மதசார்பற்ற ஜனநாயகமாக நீடிக்கக் கூடிய தேர்தலாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஜனநாயகத்தை ஒடுக்குவதற்காக எதிர்க்கட்சி இல்லாத ஜனநாயகத்தை கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் அறிவித்த பிறகு இரண்டு மாநில முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் இருவரையும் கைது செய்து எதிர்க்கட்சிகளை சமாளிக்க திராணி இன்றி அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மூலம் இயக்கப்படும் பாஜக இந்த நாட்டை ஒரு இந்து நாடாக அறிவிக்க துடிக்கிறது. பாஜகவின் கொள்கை மதச்சார்பின்மையை ஏற்றுக் கொள்வதாக இல்லை. எனவேதான் மதச்சார்பின்மைக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்திய அளவில் குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வந்து மத அடிப்படையில் மக்களை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். பாஜக ஆளும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமிய கிறிஸ்தவ சிறுபான்மையினர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்தியாவின் அரசியல் சாசனம் என்பது சாதி மதம் மற்றும் இனங்களுக்கு அப்பாற்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பாஜக அதை மாற்றுவதற்காக துடித்துக் கொண்டிருக்கிறது. பாஜகவின் ஆட்சியில் பெரிய பணக்காரர்களின் சொத்து 100 மடங்குக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. ஆனால் இவர்களது நடவடிக்கைகளில் இந்தியாவின் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்து இருக்கிறது. இதற்குக் காரணம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஊக்கம் கொடுக்கப்படவில்லை. ஆனால் இத்தகைய தொழில்கள் தான் 12 கோடி பேருக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பை கொடுத்து இருக்கின்றது. சிறு குறு தொழில் முனைவோருக்கு சாதகமான கொள்கைகள் எதையும் அமல்படுத்துவதற்கு இந்த அரசு தயாராக இல்லை. கோவை, திருப்பூர் போன்ற சிறு குறு தொழில்களை நம்பியுள்ள பகுதிகள் மோடி ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தவறான ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் மூலப் பொருட்களின் விலை கடுமையான உயர்வை சந்தித்து இருக்கிறது. சிறு குறு தொழில் முனைவோரின் கோரிக்கைகள் எதற்கும் பாஜக அரசு ஒரு முறை கூட செவிசாய்க்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் அனைத்து அத்யாவசிய பொருட்களின் விளைவுகளும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. மின்சார உற்பத்தி, மின்விநியோகம், வங்கிகள், ரயில்வே, விமான சேவை என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் ஒழிப்பதற்கு பாஜக தயாராக உள்ளது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவார்கள். தண்ணீர் கட்டணம், மின்சார கட்டணம் போக்குவரத்து என எல்லா செலவுகளும் , லாபம் மட்டுமே இலக்காக கொண்டிருக்கும் தனியாருக்கு கொடுப்பதன் மூலம் பன்மடங்கு அதிகரிக்கும். அதனால்தான் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளனர். இந்திய அரசின் பணிகளில் 10 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றது. இவற்றையெல்லாம் நிரப்புவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும். தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என விமர்சிக்கிறார். ஆனால் தேர்தல் பத்திரம் பற்றிய உண்மைகள் வெளியே வந்த பிறகு மோடியால் தன் முகத்தை நேராக வைத்துக் கொண்டு மற்றவர்களை ஊழல்வாதிகள் என்று சொல்வதற்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது. தேர்தல் பத்திரம் தொடர்பான உண்மைகள் இது ஒரு பெரிய ஊழல் மற்றும் வழிப்பறி என்பதை நிரூபித்துள்ளது. தேர்தல் பத்திரம் முறைகேடு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிபிஎம் வழக்கு தொடுத்த நிலையில், இப்போதுதான் உண்மைகள் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு இருக்கிறது. அரசாங்கத்தில் ஒப்பந்தம் தேவைப்படும் நிறுவனங்கள் நேரடியாக தேர்தல் பத்திரமாக பாஜகவுக்கு பணத்தை கொடுக்கிறார்கள். உடனடியாக பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கிடைக்கிறது. அதேபோல பல்வேறு உரிமங்கள் கிடைக்கிறது. இதற்காக 25 கோடி முதல் 50 கோடி வரை என பண பரிமாற்றம் நடந்திருப்பது பத்திரிகைகளில் செய்திகளாக வந்துள்ளது. இதைவிட மோசமான பெரிய வழிப்பறி என்பது அமலாக்கத்துறையையும், வருமானவரித் துறையையும் வைத்து மிரட்டி நிறுவனங்களிடம் வசூல் செய்வது. இந்தியா கூட்டணி என்பது ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல. கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதற்காகவும் தான். இன்றைக்கு பாஜக ஆட்சியில் மாநில உரிமைகள் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசின் உரிமைகளில் செயல்பாடுகளில் தினமும் தலையிடுகிறார்கள். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர்கள் பிரிட்டிஷ் காலத்தில் இருந்த வைசேராய் போன்று செயல்படுகிறார்கள். இன்னொரு பக்கம் கல்வியில் தலையிடுகிறார்கள்.

நீங்கள் என்ன மொழி படிக்க வேண்டும், என்ன தேர்வு எழுத வேண்டும் இப்படியான கட்டாயங்களுடன் இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் நடப்பதை பார்க்கின்றோம். இதன் மூலம் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் இந்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுப்பதில்லை, நிதி கொடுப்பதையே ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். நிதி பெறுவதற்காகவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் போய் கோரிக்கை வைக்க வேண்டி இருக்கிறது. கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது தமிழக முதல்வர் கேரளாவுக்கு ஆதரவு கொடுத்தார், அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட ஒத்துழைப்பு மாநிலங்களிடையே தேவைப்படுகிறது. பாஜகவை இன்று நாம் தோற்கடிக்க வில்லை என்றால் மாநிலங்களின் உரிமைகளும் அதிகாரங்களும் தொடர்ச்சியாக பறிக்கப்படும். கூட்டாட்சி தத்துவம் என்பதற்கு ஒரு முடிவு கட்டப்படும். மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்காக, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதற்காக, பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறேன். கடந்த முறையைப் போல இந்த முறையும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு பூஜ்ஜியத்தை பரிசாக கொடுக்க வேண்டும். இந்த தேர்தலில் பாஜகவின் மாநில தலைவர் கோவையில் போட்டியிடுவதால் அக்கட்சி இங்கு வெற்றி பெற்று விடலாம் என பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது.. 19ஆம் தேதி நீங்கள் அளிக்கப் போகும் வாக்குகள் அவர்களது கனவுகளை பொய்யாக்கும் என்று நம்புகிறேன். இந்தியா கூட்டணி சார்பில் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார். இந்த பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,திமுக கோவை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.