• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திமுக உட்கட்சி பிரச்சினை விரைவில் வெடித்து சிதறப் போகிறது
திருவில்லிபுத்தூரில் நடிகை விந்தியா பேட்டி

ByKalamegam Viswanathan

Mar 19, 2023

தமிழகத்தில், கோவில் வாசலில் இருந்து கோர்ட் வாசல் வரை கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை என நடிகை விந்தியா பேட்டியளித்தார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். பின்னர் நடிகை விந்தியா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்து பேசும்போது, கடவுளை நம்பினால் கைவிட மாட்டார் என்பது எங்கள் நம்பிக்கை. நேற்று பழனிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தேன். அதே நேரம் எங்களது கட்சியின் பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி மனுத் தாக்கல் செய்துள்ளார். அதிமுக என்பது மாபெரும் மக்கள் இயக்கம். அது குடும்பக்கட்சி கிடையாது. ஒன்றரைக் கோடி தொண்டர்களை கொண்ட இயக்கத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார். இந்த பொதுச் செயலாளர் பதவி அவரை அடைவதற்கு அவருடைய கடுமையான உழைப்பு, அவருடைய துணிச்சல், அவருடைய விசுவாசம், அவருடைய நேர்மை காரணமாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை திமுக கட்சியிடமிருந்து காப்பாற்றுவதற்காக கடுமையாக போராடி வருபவர் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு துணையாக அதிமுக கட்சியும், அதிமுக தொண்டர்களும் உறுதுணையாக இருந்து மீண்டும் அதிமுக கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஸ்ரீஆண்டாள் அம்மனிடம் வேண்டுதல் வைத்து சுவாமி தரிசனம் செய்தேன். தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது. இது தமிழக மக்களுக்கும் நன்றாகவே தெரியும். கோவில் வாசலில் இருந்து கோர்ட் வாசல் வரை கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டம் ஒழுங்கு என்பதை, திமுக ஆட்சியில் நாம் எதிர்பார்க்க முடியாது. மக்கள் விரோத ஆட்சியை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு எந்த ஒரு நல்லதையும் செய்யாமல் வெற்று விளம்பரத்தின் மூலம் ஆட்சி நடந்து வருகிறது. திமுக கட்சியில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளது. அதனை திசை திருப்புவதற்காக அதிமுக கட்சியினர் மீது பொய் வழக்குகளை போட்டு வருகின்றனர். திமுக உட்கட்சி பிரச்சினை விரைவில் வெடித்து சிதறப் போகிறது. நாம் அதனை வேடிக்கை பார்க்கத்தான் போகிறோம். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, அதனை அண்ணாமலை அவர்கள் முடிவு செய்ய முடியாது. மத்திய தலைமை தான் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும். எங்களை பொறுத்தவரை கூட்டணி அப்படியே இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வந்தவுடன் தலைவர்கள் உட்கார்ந்து பேசி நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று நடிகை விந்தியா கூறினார்.