தமிழக முதல்வர் தொடங்கி வைத்த ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பரப்புரையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் தாமரைகுளம்,தெத்தி நாகூர் ,திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் பொதுமக்களை வீடு வீடாக சந்தித்து பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது ;
நாங்கள் செல்லுமிடமெல்லாம் மக்கள் மகிழ்ச்சியடைவதை தமிழக முதல்வரின் உழைப்பிற்காக கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம்.
செல்லும் சில இடங்களில் கலைஞர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள் விடுபட்டவர்களுக்கு விரைந்து வழங்கப்படும். மக்களின் நிறைகளை மட்டுமில்லாமல் குறைகளை கேட்டறிந்து அதனை செய்து கொடுக்கிறோம். மக்களிடம் நேரடியாக முதல்வர் வீடியோ காலில் பேசுவதால் மக்களின் குறைகளை முதல்வர் நேரடியாக கேட்க வாய்ப்பு கிடைக்கிறது. மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் வீட்டிற்கும் சென்று பரப்புரை செய்கிறோம்.
அவர்களை சந்தித்து பாஜக தமிழ்நாட்டிற்கு செய்யும் துரோகங்களை பிரசாரம் செய்கிறோம். சாதி, மதம், கட்சி வேறுபாடில்லாமல் அனைவரையும் சென்று பார்க்க சொல்லியுள்ளார் தமிழக முதல்வர். கல்வி நிதி , இயற்கை பேரிடர் நிதி என தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதிகளை வழங்காமல் இருப்பது குறித்தும் மக்கள் மத்தியில் எடுத்துரைத்து ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை செய்கிறோம் என்று கூறினார்.