டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சட்டமன்ற கூட்டத் தொடரில் மானிய விவாதத்தின் போது டாஸ்மாக் ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிக்க வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (CITU-AICCTU-TPPTS-TNGTEU) சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் துறையின் பணி நிரந்தரம் தகுதி வழங்கள் சட்ட அமலாக்க அதிகாரியின் உத்தரவின் அடிப்படையில் 22 ஆண்டு காலமாக டாஸ்மாக் கடைகளில் பணி புரிந்து வரும் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் பணி தொடர்ச்சியுடன் நிரந்தரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் விற்பனை பிரிவு ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் காலமுறை ஊதியம் மற்றும் இதர பயன்களை சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு பணி ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி உள்ள நிலையில், டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஓய்வு வயதையும் 60 ஆக உயர்த்த வேண்டும் என்றும், டாஸ்மாக் நிறுவனத்தின் மருத்துவ திட்டத்தை திரும்ப பெற்று தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.





