கொடிது கொடிது வறுமை கொடிது. அதனிலும் கொடிது இளமையில் வறுமை என்பார்கள். அந்த இளமைக்கால வறுமையை புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடன் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ. மெய்யநாதன் பகிர்ந்து கொண்டார்.

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் தமிழக அரசின் உள்ளம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது அங்கு சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மெய்ய நாதன் கூறுகையில்…
இந்தக் கல்லூரியில் தான் நான் பயின்றேன். பள்ளி மேற்படிப்பு முடித்துவிட்டு பட்டப்படிப்புக்காக இந்த கல்லூரியில் வந்து சேரும்போது கல்லூரி முதல்வருக்கு முன்னால் அமர்ந்திருந்தேன். கல்லூரி மாணவர் சேர்க்கை கட்டணம் எவ்வளவு என்று தெரியாமலேயே எனது சட்டப்பையில் வெறும் 200 ரூபாய் உடன் உட்கார்ந்து இருந்தேன். கட்டணம் எவ்வளவு கேட்க போகிறாரோ என்ற பயத்தோடு அமர்ந்திருந்தேன். அப்போது கல்லூரி முதல்வர் ஐந்து ரூபாய்க்கு ரசீது போட்டு கொடுத்து இதை மட்டும் கொடுத்தால் போதும் என்று சொன்னார். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. காரணம் என்னவென்றால் அந்த ஆண்டுதான் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி என்று அறிவித்திருந்தார். வெறுமனே கொடுக்கக் கூடாது என்பதற்காக வெறும் ஐந்து ரூபாய்க்கு மட்டும் ரசீது போட்டு கொடுத்திருந்தார்கள்.

அதன் பிறகு நான் இங்கேயே எம் சி ஏ வரை படித்தேன். அதன்பிறகு சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று வந்தேன். பின்னர் ஊராட்சி மன்ற தலைவராகி அரசியலுக்குள் அடியெடுத்து வைத்து இன்றைக்கு அமைச்சர் அளவிற்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களும் இப்போது உள்ள முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலினும் தான். அவர்கள் இருவரும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறார்கள். கல்லூரியில் சேர வந்த எனக்கு அன்று அந்த கல்விக் கட்டணம் குறைக்காமல் இருந்திருந்தால் நான் இந்நேரம் சொந்த ஊரில் விவசாயம் செய்து கொண்டோ விவசாய கூலி வேலை செய்து கொண்டோ ஒரு சாதாரண மனிதனாகத்தான் இருந்திருக்க முடியும். எனவே மடிக்கணினியை பெற்றுக் கொள்ளும் நீங்கள் அனைவரும் அனைத்து விதமான கல்விகளையும் கற்று சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்துக்கு மிக்க மாமனிதர்களாக உயர வேண்டும் என்று பேசினார்.




