சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் மதுரை அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நாச்சிகுளம் செல்லும் 28 என்ற அரசு பேருந்து இன்று மதியம் 12:00 மணி அளவில் திடீரென பழுதாகி நின்று விட்டதால் அந்த வழியாக செல்ல வேண்டிய பேருந்துகள் மாரியம்மன் கோவில் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள பேருந்துகளில் ஒரு சில பேருந்துகள் தவிர அனைத்து பேருந்துகளும் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் பல்வேறு இடங்களில் பழுதாகி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று மதியம் 12 மணி அளவில் மதுரை அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நாச்சிகுளம் சென்ற பேருந்து சோழவந்தான் மார்க்கெட் ரோடு தேர் நிற்கும் இடத்தில் வந்த போது பயணிகளை இறக்கிவிட்டு கிளம்பும்போது பேருந்தின் டயரில் சத்தம் ஏற்பட்டு அந்த இடத்திலேயே நின்று விட்டதாக தெரிகிறது.
இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவசர அவசரமாக கீழே இறக்கி விடப்பட்டு மாற்றுப் பேருந்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில் பேருந்து டயருக்கு இரண்டு பெரிய கற்கள் மூலம் தடுப்பு ஏற்படுத்தி பணியாளர்கள் பேருந்தைஅந்த இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பேருந்து நிலையம் செல்ல வேண்டிய ஒரு சில பேருந்துகளும் மாரியம்மன் கோவில் மருது மஹால் வட்ட பிள்ளையார் கோவில் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் நடைபெறும் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் அடிக்கடி பழுதாகி நிற்கும் பேருந்துகளால் தற்போது பிரச்சனைகள் அதிகமாய் கொண்டே இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.