தமிழக – கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வாகனங்கள், தனியார் மற்றும் இரு மாநில அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து கோவை நோக்கி வந்த கேரளா அரசு பேருந்தை வாளையார் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அதில் உரிய ஆவணங்களின்றி 415 கிராம் தங்க மோதிரங்களை அம்மாநிலத்தைச் சேர்ந்த ஜாதி என்பவர் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கேரள மாநிலத் திருச்சூரில் நகைக் கடை நடத்தி வருவதும் உரிய ரசிதுகள் மற்றும் ஆவணங்களின்று கோவையில் உள்ள சிறு நகை கடைகளுக்கு சப்ளை செய்ய இந்த நகைகளை கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 415 கிராம் தங்க மோதிரங்களின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்த காவல் துறையினர் கோவை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர். கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்க மோதிரங்கள் கோவையில் சோதனைச் சாவடியில் பிடிபட்ட விவகாரம் நகை வியாபாரிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





